50 கி எடைப்பிரிவில் பங்கேற்பதற்கு 100கிராம் எடை அதிகமாக உள்ளதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத். முன்னதாக, இரவு முழுவதும் உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட வினேஷ் போகத், ஒரே இரவில் ஒரு கிலோ 850 கிராம் அளவிற்கு உடல் எடையை குறைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரவு முழுவதும் தூங்காமல், மிகக் குறைந்த அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் ஸ்கிப்பிங், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் பலமணி நேரம் செலவழித்துள்ளார். ஆனாலும் கூட 100 கி எடை காரணமாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீரர் வீராங்கனைகளின் எடை என்பது முக்கியமானதாக இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில், எடையைப் பராமரிப்பது என்பது வீரர்களுக்கு எப்போதும் சவாலான ஒன்றுதான். அதிலும் போட்டிக்கு முந்தைய 24 மணி நேரம் என்பது ஒவ்வொரு வீரருக்கும் முக்கியமான ஒன்று. போட்டி இருக்கும் சமயத்தில் பெரும்பாலான வீரர் வீராங்கனைகள் கார்போஹைட்ரேட்டு உள்ள உணவை உட்கொள்வதை நிறுத்திவிட்டு திரவ உணவை உட்கொள்கின்றனர். சில சமயங்களில் 500 முதல் 800 கலோரிகளை உட்கொள்ளும் அளவிற்கு கூட வீரர்கள் செல்கின்றனர்.
நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளும் அதே வேலையில், அதனால் எடையும் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. ஆனால், அடுத்த சில மணி நேரங்களுக்குள் உங்களுக்கு போட்டி இருக்கும்போது உங்களால், உங்கள் உடலில் இருக்கும் நீர் மற்றும் கிளைக்கோஜனை குறைப்பதன் மூலம் மட்டுமே எடையைக் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதன் காரணமாகவே எடையை வேகமாக குறைக்க சைக்கிள் பயிற்சி, ஜாகிங் போன்றவற்றை செய்கின்றனர். முதல்நாள் சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம், சேமிக்கப்பட்டுள்ள கிளைக்கோஜனை உடல் பயன்படுத்திக் கொள்ளும். அதேசமயத்தில் இந்த நடைமுறை எடைக் குறைப்பு என்பதைத் தாண்டி சோர்வு உட்பட பல்வேறு நலச் சிக்கலையும் ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலில் உள்ள நீரைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது ஹார்மோன்கள், உடலில் நீரை தக்கவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்கின்றனர் மருத்துவர்கள். ஹார்மோன் ரெகுலேசனில் மன நலம் மற்றும் மன அழுத்தமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், அது இன்சுலின், குளுக்கோஸ் அளவுகளை அதிகரிக்கும் என்கின்றனர்.
மறுபுறத்தில் குறுகிய காலத்தில் எடையைக் குறைப்பது என்பது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். குறுகிய காலத்தில் எடையை குறைப்பது என்பது எலக்ட்ரோலைட்கள் ஏற்றத்தாழ்வுக்கும், கல்லீரல் செயலிழப்புக்கும் உட்படுத்துவதுடன் கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு உடல் எடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறைப்பது என்பது சவாலானது என்பதையும் மறக்கக்கூடாது என்பது நிபுணர்கள் கூற்று.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் யார் ஈடுபடும்போதும் ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைகளைப் பெறுவது அவசியம்.