சரியில்லாத உணவு முறையே பாதி நோய்களுக்கு காரணம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சரிவிகித உணவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது.
காய்கறி, பருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், கீரை வகைகள், முட்டை, இறைச்சி வகைகள், முந்திரி, பாதம் போன்ற நட்ஸ் வகைகள், பால், தயிர்.. இவை அனைத்தும் சரியான விகிதத்தில் தினந்தோறும் உங்கள் தட்டில் உள்ளதா? அப்படியானால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டிய தேவையே இல்லை.
நாள்தோறும் நாம் உண்ணும் சமநிலையற்ற உணவு பழக்கமே, நாட்டில் 56 சதவீதத்துக்கும் அதிகமான நோய்கள் வருவதற்கு காரணம்.
நாள்தோறும் நாம் எடுத்துக் கொள்ளும் தானிய வகைகள் 45 சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி ஆகியவை 15 சதவீதம் வரை இருக்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை நாள்தோறும் 30 சதவீதத்திற்குள்ளும், நட்ஸ், பால் பொருட்கள் போன்றவற்றை 10 சதவீதத்திற்குள்ளும் உட்கொள்ள வேண்டும்.
உணவே மருந்து எனும் அதே வேளையில், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, சரியான விகிதத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். புரதம், உப்பு, சர்க்கரை போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
ஆகவே, சரிவிகித உணவு முறையுடன் சிறிது உடற்பயிற்சியும் இருந்தால் இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்