தற்காலிக முடி உதிர்தல் அல்லது டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen effluvium) என்பது எடை குறைப்புக்கு பிறகு பொதுவாக ஏற்படும் பிரச்னைதான். எடை குறைத்தபிறகு 3-4 மாதத்தில் ஆரம்பிக்கும் முடி உதிர்தல் பிரச்னையானது கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை நீடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். எடை குறைப்பின்போது உடலில் கொடுக்கப்படும் திடீர் அழுத்தத்தால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்னையானது தவிர்க்கமுடியாததுதான் என்கின்றனர் நிபுணர்கள்.
முடி உதிர்தலின் வரம்பு என்ன?
அமெரிக்க சரும மருத்துவ அகாடமியின் கூற்றுப்படி, ஒருநாளில் 50-100 முடி உதிர்தல் என்பது இயல்புதான். ஆனால் அதைவிட அதிக அளவில் முடி உதிரும்போது அதை முடி கொட்டுதல் என்கின்றனர். இதை மருத்துவத்தில் டெலோஜென் எஃப்ளூவியம் என அழைக்கின்றனர்.
முடி கொட்டுதல் vs முடி உதிர்தல்
முடி உதிர்தல் என்பது முடியின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு தீவிரமான பிரச்னைதான் என்றாலும், முடி உதிர்வு என்பது தற்காலிகமானதுதான் என்று அமெரிக்க சரும மருத்துவ அகாடமி கூறியிருக்கிறது. உடலில் அழுத்தம் குறையும்போது முடி உதிர்தலும் படிப்படியாக நின்று முடி வளர ஆரம்பிக்கிறது. எடை குறைப்பு, குழந்தைப்பேறு, அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை என முடி கொட்டுதலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. உடல் எவ்வளவு சீக்கிரம் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அதற்க்கேற்றார்போல் முடி கொட்டுதலும் நின்றுவிடும். ஆனால் முடி உதிர்தலுக்கான காரணி எப்போது தடுக்கப்படுகிறதோ அப்போதுதான் முடி உதிர்தல் அல்லது அனஜென் எஃப்ளூவியம்(Anagen effluvium) முடிவுக்கு வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
முடி உதிர்வுக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், அதிக ரசாயனம் நிறைந்த முடி பராமரிப்பு பொருட்கள், பரம்பரை முடி உதிர்தல் பிரச்னை மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவை இன்றைய காலகட்டத்தில் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
முடி உதிர்தலை ஏன் நிகழ்கிறது? புரிந்துகொள்ளுங்கள்
முடியானது கெராட்டின் புரதங்களால் ஆனது. முடியின் ஆயுட்காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டத்தில் முடி சில வருடங்கள் வரை நன்றாக வளரும். இரண்டாவது கட்டமானது இடைநிலை. அதாவது முடியின் உறுதித்தன்மை குறைய ஆரம்பிக்கும். கடைசி கட்டத்தில் மயிர்க்கால்களின் வேர் வலுவிழந்து உதிர்ந்துவிடும். பிறகு அங்கு புதிய முடி முளைக்கும். ஆனால் உடலில் அழுத்தம் அதிகரிக்கும்போது இரண்டாம் நிலையிலேயே முடி தனது வாழ்நாளை முடித்துக்கொள்ளும். அதேபோல் முடி வளர்தலின் வேகம் மற்றும் தன்மைக்கு நபருக்கு நபர் வேறுபடும். ஆனால் பொதுவாக ஒரு மாதத்திற்கு அரை இன்ச் முடி வளரும் என்கின்றனர்.
டெலோஜென் எஃப்ளூவியம் அறிகுறிகள்
தலைமுடியை சீப்பால் சீவும்போதோ அல்லது தலைக்கு குளிக்கும்போதோதான் பெரும்பாலும் இந்த டெலோஜென் எஃப்ளூவியம் கவனிக்கப்படுகிறது. மேலும் வீட்டில் முடி உதிர்ந்து கிடப்பது, குறிப்பாக படுக்கை மற்றும் தலையணையில் முடி அதிகளவில் தென்படுவதும் தீவிர முடி உதிர்தல் பிரச்னையின் அறிகுறிகளே. இதுதவிர டெலோஜென் எஃப்ளூவியத்திற்கென்று தனி அறிகுறிகள் எதுவும் இல்லை. தலையின் மேற்பகுதி மென்மையாதல் மற்றும் தொடும்போது உணர்ச்சி மாறுபடுதல் போன்றவை அறிகுறிகளாக கவனிக்கப்படுகிறது. இதை டிரிகோடினியா(Trichodynia) என அழைப்பதாகக் கூறுகிறது பிரிட்டிஷ் சரும நிபுணர் சங்கம்.
எடை குறைப்புக்கு பிறகான முடி கொட்டுதல் ஆபத்தானதா?
முடி கொட்டுதல் என்பது ஆபத்தானது அல்ல; நிரந்தரமானதும் அல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து போதுமான ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர். இல்லாவிட்டால் தலை வழுக்கை நிலைக்கு சென்று பிறகே முடி வளரும் எனவும், ஆனால் இந்த சுழற்சிமுறை மிகவும் மெதுவாகவே நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றனர். டெலோஜென் எஃப்ளூவியத்தை பொருத்தவரை எந்தவித சிகிச்சையும் இல்லாமல் சில மாதங்களில் அதுவே தானாக சரியாகிவிடும் என்கிறது பிரிட்டிஷ் சரும நிபுணர் சங்கம். அதாவது கிட்டத்தட்ட 100 நாட்களில் (3-6 மாதங்கள்) சரியாகி, புதிய முடி வளர ஆரம்பிக்கும் என்ற சற்று ஆறுதலான தகவலையும் அளித்திருக்கிறது. அப்படி முடி கொட்டுதல் குறையாத பட்சத்தில் சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.