ஜிம்பாப்வே முகநூல்
உலகம்

நேற்று நமீபியா இன்று ஜிம்பாப்வே.. வரலாறு காணாத வறட்சி - யானை கொன்று உணவாக வழங்கப்படும் அவலநிலை!

வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ். பாலமுருகன்

வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனித குலத்தின் இந்த குரூர எண்ணம், உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெருமழை, புயல், பெருவெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி, கடும் வெப்பம், காட்டூத்தீ என பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் திணறுகின்றன. எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் பேரழிவை சந்தித்து வருகின்றன.

கடும் வறட்சியினால் மழையின்றி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 68 லட்சம் மக்கள் நேரடியாக வறட்சியின் பிடியில் சிக்கினர். இதன் விளைவாக கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், நமீபியாவில் 83 யானைகள் உட்பட 160 வனவிலங்குகளை கொன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. நமீபியா எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

அங்கு நாற்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக யானைகள் கொல்லப்படவுள்ளன. கடும் வறட்சியான சூழலில் உணவுக்காக மனித-விலங்கு மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனவிலங்குகளை கொன்று உணவளிக்க அரசே களத்தில் இறங்கியுள்ளது. ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா ஆகிய ஐந்து தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வாழ்கின்றன.

உலகில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகளவில் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில்தான் வாழ்கின்றன. ஜிம்பாப்வேயில் 84 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்ண உணவில்லால், குடிக்க தண்ணீரில்லாமல் கையறு நிலையில் மக்கள் நிற்கின்றனர்.

வனவிலங்குகளை கொல்வது பற்றியும், காலநிலை மற்றம் குறித்தும் கவலை தெரிவிக்கும் உலக நாடுகளால், தெற்கு ஆப்பிரிக்க மக்களின் பட்டினியைப் போக்க முடியாதா? என்று மனித நேயம் உள்ளவர்கள் எழுப்பும் கேள்வியும் ஓங்கி ஒலிக்கிறது.