ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில், அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
ஜிம்பாப்வேயின் அதிபராக ராபர்ட் முகாபே பதவி வகித்து வருகிறார். இவரின் நடவடிக்கை நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நாட்டின் முழு அதிகாரத்தையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக அதிபர் முகாபேவுக்கு நெருக்கமான நபர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் அதிபர் முகாபேவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் எங்கு இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை முகாபே எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. துணை அதிபர் எம்மர்சனை பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, இந்நடவடிக்கையை ராணுவம் எடுத்துள்ளது. இதனால் அங்கு ராணுவ புரட்சி நடந்துள்ளதா என்ற சந்தேகம் சர்வதேச நாடுகள் மத்தியில் வலுத்து வருகிறது. எனினும் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவில்லை என ஜிம்பாப்வே ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.