பனிமனிதன், பிக்ஃபூட் என்று காலம்காலமாக மக்கள் நம்பி வந்தது கரடி என்று டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஆங்கிலத்தில் எட்டி(Yeti), பிக்ஃபூட் (big foot) என்றெல்லாம் அழைக்கப்படும் பனிமனிதன் (snowman) தொடர்பான கதைகள் பல நூறு ஆண்டுகளாக திபத், நேபாளம் உள்ளிட்ட இமயமலை நாடுகளைச் சேர்ந்த மக்களால் சொல்லப்பட்டு வருகின்றன. இமயமலை பகுதிகளில் பனிமனிதன் தொடர்பான பல மாதிரிகள் தற்போது வரை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அப்படி சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அமெரிக்காவின் பஃபாலோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மரபணு (DNA) சோதனைக்கு உட்படுத்தினர். எலும்பு, பல், முடி உள்ளிட்ட 9 வகையான மாதிரிகளை ஆய்வு செய்ததில், மாதிரிகளில் ஒன்று நாயின் மாதிரி என்றும், மீதமுள்ள 8 மாதிரிகள் ஆசிய கருப்பு கரடி மற்றும் திபெத்திய பழுப்பு நிறக் கரடியின் மாதிரிகள் என்று ஆய்வு முடிவில் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னதாக பனிமனிதன் குறித்து நடந்த ஆய்வுகள் அனைத்தும் முழுமையானதாக இல்லை. அவற்றின் ஆய்வு முடிவுகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தன. ஆனால் தற்போது செய்த மரபணு சோதனை, சந்தேகங்களுக்கு இடமில்லாமல், பனிமனிதன் என்று மக்கள் நம்பியது கரடிதான் என்று நிரூபித்துள்ளது.