அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்கு அவர் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா - சீனா இடையேயான உறவு என்பது ஓர் அழுத்தம் மிகுந்ததாக இல்லை. தற்போதைய ஜோ பைடன் ஆட்சியிலும் இதேநிலைதான். முட்டல் மோதல்களுடனேயே கடந்த 4 ஆண்டுகள் கழிந்துபோயுள்ளன.
இந்த நிலையில், மீண்டும் அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப்வால், சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு குறித்த பேச்சு எழுந்துள்ளது. காரணம், கடந்தகால தன்னுடைய ஆட்சியில் சீனாவைக் கடுமையாக விமர்சித்தவர், டொனால்டு ட்ரம்ப். அந்த நாட்டுப் பொருட்களுக்கு எதிராக அதிக வரிவிதித்த அவர், சிலவற்றுக்கு தடையும் விதித்தார். மேலும், அப்பொருள்கள் அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல், ’சீனாதான் நமக்குப் போட்டியாளர்’ என்றார். இதனால், சீனாவை உலகளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார். தொடர்ந்து, 2019-20 பெருந்தொற்று காலத்தின்போது கோவிட்டை ’சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். இதன் காரணமாக சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு பெரும் பாதிப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அமைந்த ஜோ பைடன் அரசு, சீனாவைத் தூரத்தில் வைத்தபோதும் ஓரளவுக்கு அணைத்துக் கொண்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் அமையப் போகும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் பெருவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு இடையே சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அமெரிக்காவின் புதிய ஆட்சியுடன் இணைந்து பணிபுரிய சீனா தயாராக இருப்பதாகவும் ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஆனால், அவர் டொனால்டு ட்ரம்ப் பெயரைச் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோ பைடனிடம், ஷி ஜின்பிங், “சீன-அமெரிக்க உறவை இருநாட்டு மக்களின் நலனுக்காகச் சீராக மாற்ற முயற்சிக்கும் வகையில், புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் தகவல் தொடர்பு, ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் வேறுபாடுகளை நிர்வகித்தல் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. அந்த வகையில், இரு நாடுகளும் நல்ல முறையில் கூட்டாளியாக தொடரும்போது நமது உறவு மேலும் வளர்ச்சி பெறும். ஆனால் நாம் ஒருவரையொருவர் போட்டியாளர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ நினைத்தால் அந்த உறவிலிருந்து நாங்கள் வெளியேறுவோம். ஆக, சீனா-அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, மனிதகுலத்தின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுகிறது. ஆகையால், இரண்டு நாடுகள் தொடர்ந்து பயணிப்பதற்கு சரியான வழியை ஆராயுங்கள். இரு நாடுகளின் நலனுக்காக, நிலையான மாற்றத்திற்காக சீனா பாடுபடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”நாம் இருவரும் இணைந்து செய்த பயணத்திற்காக, வளர்ச்சிக்காக நான் பெருமைப்படுகிறேன். நமது ராணுவம் பல நிலைகளில் ராணுவத் தொடர்பு, நமது தலைவர்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பேசி வருகின்றனர். AIஇல் உள்ள ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு பற்றி விவாதிக்க நமது நாடுகளின் நிபுணர்களை ஒன்றாக இணைத்துள்ளோம்” என்றவர், ”உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள வடகொரியாவைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என ஜின்பிங்கிடம் கோரிக்கை வைத்தார்.
எவ்வாறாயினும், சீன இறக்குமதிகளுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என பிரசாரத்தின்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனால், உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே உறவில் மேலும் நெருக்கடி ஏற்படலாம். இதன் காரணமாக அமெரிக்க-சீனா உறவுகளின் எதிர்காலம் குறித்து கணிசமான நிச்சயமற்ற நிலை உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்திய ஆதரவாளராக கருதப்படும் மைக் வால்ட்ஸ், ஆசிய - பசுபிக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர். தவிர, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து வருகிறார். இதனாலும் சீனா கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.