உலகம்

‘கொரோனா வைரஸால் மருத்துவமனை இயக்குநரே மரணம்’ - அதிர்ச்சியில் சீன மக்கள்..!

webteam

சீனாவின் வுஹான் மருத்துவமனையின் இயக்குநர் கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் மகாணத்தில் 50 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் கொடூரமாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனப்படுகின்றது. சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 72 ஆயிரம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 1,900 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், 11,741 பேர் தீவிர நோய்ப் பாதிப்பில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் மக்களில் இதுவரை வெறும் 7,900 பேர் மட்டுமே சிகிச்சைமூலம் குணமடைந்திருப்பதாகவும், இதில் 1,800 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த சீன மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து முன்னதாக வந்த இந்தியர்கள் பலரையும் தீவிர சிகிச்சையில் இந்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் சீன மக்களுக்கு தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, கொரோனா வைரஸ் தற்போது டாக்டர்களையும் உயிரிழக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. சீனாவில் பல மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது வுஹான் மாகாணத்தின் வூசாங் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான லியு ஷிமிங் (34) உயிரிழந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு என்ன என்பது தெரியாமல் குழப்பங்கள் இருந்த நிலையில், தற்போது அவர் கொரோனா வைரஸால்தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையின் இயக்குநரே கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் பரவியதும், சமூக வலைத்தளங்களில் சீன மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். மருத்துவர்களே இந்த வைரஸால் இறந்தால், பின்னர் மற்ற மருத்துவர்களும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க மறுத்து மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்கள் என்றும், இதனால் மக்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இன்றி எண்ணிக்கையின்றி இறந்துபோவார்கள் என்றும் அச்சத்தை பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே விரைவில் இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.