உலகம்

டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்: கூகுள் வெளியிட்ட டூடுள்

webteam

உலகிலேயே முதன்முதலாக டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணை பெருமைப்படுத்தி கூகுள், டூடுள் வெளியிட்டுள்ளது.

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அதன்படி உலகிலேயே முதன் முதலாக பி.எச்டி பட்டம் பெற்ற பெண்ணின் 373ஆவது பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு டூடுள் ஒன்றை இன்று வெளியிட்டு அவரை கூகுள் பெருமைபடுத்தியுள்ளது. 

அந்த பெருமைக்குரிய பெண்ணின் பெயர் 'எலீனா கார்னாரோ பிஸ்கோபியா'. செல்லமாக 'ஹெலன் கோர்னாரோ' என்றும் அழைக்கப்படுவார். ஜூன் 5, 1646 அன்று ஜனீட்டா போனி மற்றும் கியோவன்னி பட்டிஸ்டா கோர்னாரோ - பிஸ்கோபியா என்ற தம்பதியருக்கு மகளாக இத்தாலியில் உள்ள வெனிஸில் பிறந்தார் ஹெலன். சிறு வயது முதலே கல்வி கற்பதில் ஆர்வமுடையவராகவே ஹெலன் இருந்தார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக கல்வி கற்பது ஹெலனுக்கு சவாலாகவே இருந்தது. 

அப்போது ஹெலனின் குடும்ப நண்பரான மதபோதகர் ஒருவர் உதவி செய்ய, அவரின் ஆலோசனைப்படி சிறந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி பயின்றார். லத்தீன், கிரேக்க மொழி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், எபிரேய மொழி போன்ற மொழிகளையும், கணிதம், தத்துவம், இறையியல் ஆகிய பாடங்களிலும் சிறந்து விளங்கினார். தொடக்க காலத்திலிருந்தே ஹெலன் கன்னியாஸ்திரியாக மாற விரும்பினார். 

1969 ஆம் ஆண்டு ஸ்பானிய மொழியில் இயேசு குறித்த நூல்  ஒன்றை இத்தாலிய மொழியில் மொழிப் பெயர்த்து எழுதி இருந்தார் ஹெலன். அந்த புத்தகத்தை 1969 - 1972க்கு இடையேயான காலத்தில் 5 பதிப்புகளாக  வெனிஸ் அரசாங்கம் வெளியிட்டது. படுவா பல்கலைக் கழகத்தில் ஹெலனுக்கு இறையியலில் பட்டம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பெண் என்பதால் படுவா பிஷப்பால் மறுக்கப்பட்டது. பின்பு 1678, ஜூன்.25 ஆம் தேதி அவருக்கு உலகிலேயே முதன் முதலாக இறையியலில் பி.எச்டி பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது  32.

1684, ஜூலை.26 ஆம் நாள் இத்தாலியில் உள்ள படுவா நகரில் காசநோயால் ஹெலன் உயிரிழந்தார். ஹெலனை பெருமைப்படுத்தும் விதமாக அவர் படித்த பல்கலைக்கழகத்திலேயே அவருக்கு சிலை ஒன்றை பல்கலை., நிர்வாகம் நிறுவியது.