உலகம்

பத்திரிகை சுதந்திரத்துக்கான குரல்: 'உலக பத்திரிகை சுதந்திர தினம்' இன்று!

பத்திரிகை சுதந்திரத்துக்கான குரல்: 'உலக பத்திரிகை சுதந்திர தினம்' இன்று!

webteam

 உலக நாடுகளுக்கு பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் பிரகடனப்படுத்திய ’உலக பத்திரிகை சுதந்திர நாள்’ இன்று கடைபிடிக்கப்படுகிறது

இந்தியாவில் பத்திரிகைகளுக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான். அப்போது ஆளுநர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பல்வேறு விதிகளை அமல்படுத்தினார். 1781 ஆம் ஆண்டு வங்காள கெஜட் என்ற பத்திரிகையை ஹேஸ்டிங்ஸ் கண்டித்ததுடன், அதன் ஆசிரியரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

பின்னர் 1799 ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கான புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, பத்திரிகையின் ஆசிரியர், உரிமையாளர் பற்றிய விவரங்கள், முகவரி ஆகியவற்றை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும், பத்திரிகையை அச்சிடுபவரின் பெயரை, அச்சகத்தின் விவரத்தை பத்திரிகையில் வெளியிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகை வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

அதன் பின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பராமரிக்கப்பட்டது. எனினும், உலக அளவில் பல்வேறு நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் என்பது கேள்விகுறியாகவே இருந்து வந்தது. 1986 ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரை அவரது அலுவலகம் முன்பாக வைத்தே, அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்தனர். அவரின் படுகொலைக்குப் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு சர்வதேச அளவில் வலுப்பெற்றது.

இதைத் தொடர்ந்து பத்திரிகை சுதந்திரத்துக்கான குரல் ஐ.நா.வில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி அதற்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டன. 1993 ஆம் ஆண்டு பத்திரிகை சுதந்திர நாளை கொண்டாடுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி 'உலக பத்திரிகை சுதந்திர தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நாளில் உலக அமைதிக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் போராடும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படுகின்றன. இந்த கவுரவத்துக்கு உரிய நபர்களை 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.