சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம், மே மாதம் 3-ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்த ஆய்வில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த 2017-ம் ஆண்டிற்கான ஆய்வை எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ஆர்.எஸ்.எப் ) வெளியிட்டிருக்கிறது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 136-வது இடத்தில் இருக்கிறது.
பத்திரிக்கைகளுக்கு வரம்புகளை விதிப்பதை, இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு, ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிகையைக் தொடர்ச்சியாகக் கண்டித்ததுடன், அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
1799 ஆம் ஆண்டு வெல்லெஸ்லி, பத்திரிக்கைகளுக்கான புதிய சட்ட திட்டங்களை கொண்ட சென்சார்ஷிப் சட்டத்தை உருவாக்கினார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
♦ பத்திரிகையின் ஆசிரியர், உரிமையாளர் ஆகிய இருவரைப் பற்றிய விவரங்கள், முகவரி ஆகிய விவரங்களை அரசின் செயலாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
♦ பத்திரிகையை அச்சிடுபவரின் பெயரை, அச்சகத்தின் விவரத்தை பத்திரிகையில் வெளியிடுவது கட்டாயம்.
♦ ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகை வெளியிடப்படக்கூடாது.
♦ அரசின் செயலாளர் அல்லது அரசின் பிரதிநிதி ஒருவரால் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பத்திரிகை வெளியிடப்பட வேண்டும்.
♦ இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
முதல் இரு நிபந்தனைகள் இப்போதும் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.