உலகம்

உலகச் செய்திகள்: ஆஸி., பிரிட்டன் கோவிட் நிலவரம் | பிலிப்பைன்ஸ் விபத்து | சிலி போராட்டம்

உலகச் செய்திகள்: ஆஸி., பிரிட்டன் கோவிட் நிலவரம் | பிலிப்பைன்ஸ் விபத்து | சிலி போராட்டம்

நிவேதா ஜெகராஜா

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அடுத்த 2 நாட்கள் மிக முக்கியமானவை என நியூ சவுத் வேல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா பரவல் ஆஸ்திரேலியாவில் அதிகரித்ததை தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸுக்கு உட்பட்ட சிட்னி உள்ளிட்ட நகரங்களில் இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு பயன் அளித்ததா என்பது அடுத்த இரண்டு நாட்களில் தெரிய வரும் என கூறியுள்ள நியூ சவுத் வேல்ஸ் நிர்வாகம், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்துள்ளது. இங்கு நடப்பாண்டில், அதிகபட்சமாக ஒரேநாளில் 35 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெடி வைத்து தகர்க்கப்பட்ட கட்டடம்: கொலம்பியாவில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தும் கட்டடங்கள் குறித்து கொலம்பியாவில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கட்டடம் பலவீனமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வெடிவைத்து கட்டடம் முழுவதும் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் விமான விபத்து உயிரிழப்பு 50 ஆனது: பிலிப்பைன்ஸ் விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான C - 130 வகையைச் சேர்ந்த விமானம், 3 விமானிகள், ஐந்து சிப்பந்திகள், விமானப்படை வீரர்கள் என மொத்தம் 96 பேருடன் சுலு மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த ஓரிடத்தில் தரையிறங்க முற்பட்டபோது விழுந்து நொறுங்கியது. அப்போது வெடித்துச் சிதறிய விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் விமானத்தில் பயணித்த வீரர்கள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 50ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமளிக்கும் வகையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 245ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்: அமெரிக்காவின் 245ஆவது சுதந்திர தினத்தை வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு சுதந்திர தினம், வழக்கம் போல் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற வாண வேடிக்கையை, அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பெற்ற பின் நடைபெறும் முதல் கொண்டாட்ட நிகழ்வு இதுவாகும். நியூயார்க் நகரிலும், வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 16 மாதங்களுக்குப் பின், கொரோனாவில் இருந்து நாடு மீண்டதை இச்சுதந்திர தினத்தில் அனைத்து அமெரிக்கர்களும் கொண்டாட வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவிற்குப் பின் அமெரிக்க மக்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருவதாகவும், ஆனால் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பாதி இடிந்து விழுந்த கட்டடம் முழுவதும் தகர்ப்பு: அமெரிக்காவில் மியாமி பகுதியில் பாதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான கட்டடம் முழுவதுமாக இடித்து தகர்க்கப்பட்டது. ஃபுளோரிடா மகாணத்திலுள்ள கடற்கரை நகரமான மியாமியில், 12 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த வாரம் இடிந்து விழுந்தது. இந்த கட்டட விபத்தில் இதுவரை 24பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,காணாமல் போன 121பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாதி இடிந்த கட்டடத்தை முழுமையாக தற்போது இடித்துள்ளனர். கட்டடம் இடிக்கப்பட்டாலும், காணாமல் போனவர்களை இடிபாடுகளுக்குள் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக மியாமி கடற்கரையில் 95கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடம் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்: இங்கிலாந்தில் இனி முகக்கவசம் அணிவது தனி நபர் விருப்பம் என வீட்டுவசதித் துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார். ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதை விரும்பவில்லை எனக் கூறியுள்ள ராபர்ட் ஜென்ரிக், அதனை தனிநபர் விருப்பம் சார்ந்த விவகாரத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக வரும் 19 ஆம் தேதி அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போப் பிரான்சிஸூக்கு அறுவை சிகிச்சை: ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸூக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தத் தகவலை வாடிகன் செய்தித் தொடர்பாளர் மட்டீயோ புரூனி தெரிவித்துள்ளார். 84 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு பெருங்குடலில் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான அறுவை சிகிச்சை ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய போப், பொதுமக்களுக்கு தனது ஆசிகளை வழங்கினார்.

வனப்பகுதி தீ: சைப்ரஸ் நாட்டில் குடியுருப்புப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ட்ரூடோஸ் மலையை ஒட்டிய வனப்பகுதியில் சுமார் 50 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு தீ பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்ததால் தீ பற்றி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலியில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு: சிலியில் புதிய அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நடத்திய பேரணியின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே இடதுசாரிகள் பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அப்போது புதிய அரசின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. வன்முறை வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது: விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து முகநூலில் பதிவிட்ட தமிழ் இளைஞரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சண்முகராசா விதிலக்ஸன் என்பவர், விடுதலைப்புலிகள் குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுறித்து அறிந்த குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினர், சண்முகராசாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.