உலகம்

இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்...!

இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்...!

subramani

யூனிபார்மிட்டி என்பது ஒரு சமுதாய நோய்., அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என நினைப்பதொரு வன்முறை. பொது சமூகம் எதை பின் தொடர்கிறதோ
அதையே சர்வ உலகமும் பின் தொடர வேண்டும் என நினைக்கிறது. உண்மையில் இந்த உலகமானது ஒற்றைக் காகிதத்தில் உங்களுக்கென பிரத்யேகமாக எழுதப்பட்ட
ரகசிய கடிதம் அல்ல. அது ஆயிரமாயிரம் சுவாரஸ்ய பக்கங்களால் எழுதப்படுகிற நீட்சியின் நீட்சி. அதில் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் சம உரிமை
உள்ளது.

ஆம்., இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்...!
இந்த நோயை முதன் முதலில் கண்டறிந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் ஜான் லாங்டன் டவுன். 1862-ல் தனது ஆராய்ச்சிகள் மூலம் டவுன் சிண்ட்ரோம் எப்படி
ஏற்படுகிறது என கண்டறிந்தார் அவர். அதனால் தான் அவரது பெயரின் பின்பாதி இந்த நோய்க்கு வைக்கப்பட்டது.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அசோசியேசன் ஒன்றை உருவாக்கி நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த ரேகா ராமச்சந்திரனிடம் இது குறித்து
பேசினோம்...

“மனித உடலின் மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. அவற்றை 23 இணை குரோமோசோம்கள் என குறிப்பிடுவர். அதில் 21’வது குரோமோசோம் இணையில்
மூன்றாவதாக ஒன்று கூடுதலாக உருவாவதே டவுன் சிண்ட்ரோம் குறைபாடு எனப்படுகிறது. அதனைக் குறிப்பிடவே வருடத்தின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம்
21-ஆம் தேதியன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இக் குறைபாட்டுடன் பிறக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை 800 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது.” என்ற அவர் “இக்குறைபாடுள்ள குழந்தைகளை மாற்றுத் திறனாளிகள் எனக்
குறிப்பிடுவதே தவறு.” என்கிறார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய ரேகா ராமச்சந்திரன் “இந்த டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போலவே நல்ல மன ஆரோக்கியத்துடன்
தான் இருப்பார்கள், ஆனால் இவர்கள் உடலின் எதிர்ப்பு சக்தி தான் மிகவும் குறைவாக இருக்கும். பெரும்பாலும் இவர்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். புருவங்கள்
அளவில் மாறுபடுவது. மாறு கண் போன்ற தோற்றம் இருப்பது. ஐந்தடிக்கும் குறைவாக இருப்பது போன்றவை இவர்களின் புற அடையாளங்களாக இருக்குமே தவிர
அவர்களும் நம்மைப் போலவே தான்.” என்கிறார் உறுதியாக. “என் பொண்ணு இந்த குறைபாடு உள்ளவ தான், அவளுக்கு இப்போ 40 வயது ஆகுது. அவள இன்னும் நான்
சிறப்பா கவனிச்சுட்டு தான் இருக்கேன்.” என்று சொல்லும் ரேகா ராமச்சந்திரன்., இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநிலத்திலும் இவ்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட
குடும்பங்களை வாட்ஸ் ஆப் போன்ற சோஸியல் நெட்வொர்க் மூலம் இணைத்து உதவியும் வருகிறார்.

உண்மையில் டவுன் சிண்ட்ரோம் குறைப்பாட்டை முழுமையாக சரி செய்யும் அளவிற்கு மருத்துவம் வளரவில்லை. என்றாலும் மனிதம் மூலம் இன்றே இக்குறைபாட்டை
சரி செய்ய முடியும். நம்மைச் சுற்றி இருக்கிற டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளை அள்ளி அனைத்து அன்பு செய்வோம். அன்பை விடவும் நோய் தீர்க்கும் மாமருந்தொன்று இல்லை தானே...!