உலகம்

ஆடுகளத்திற்குள் திடீரென ஓடிவந்த பெண்: கனிவாக நடந்து கொண்ட டி காக், ஸ்டெயின்..!

webteam

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 223 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்காவை வென்றது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெண் கையில் மாஸ்க்குடன் ஆடுகளத்திற்குள் ஓடி வந்தார்.அனைவரையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமாக “வொண்டர் வுமன்” ஆடையில் அந்தப் பெண் வந்திருந்தார்.

வேகமாக வந்த அவர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயிண்டன் டி காக்கிடம் வந்து, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வைப் பற்றி பேசியதோடு அவரை, முகத்தில் மாஸ்க்கை அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைச் சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக்கொணடார் குயிண்டன் டி காக். அதன் பின்னர் அவருடன் இணைந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்கும் (Dale Steyn)அந்தப் பெண் 5 மாஸ்க்குகளை அளித்தார். அதை மிக உற்சாகமாக ஏற்றுக்கொண்டார் அவர்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கீரீன் பீஸ் ஆப்பிரிக்க அறக்கட்டளையின் உறுப்பினர் என்பதும், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக இப்படி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து “வொண்டர் வுமன்” ஆடையில் ஆடுகளத்தில் நுழைந்த பெண் வீரர்களுக்கு மாஸ்க் வழங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.