இன்றைய தேதியில் எந்தச் செய்தியை பற்றியாவது அறிய வேண்டும் என்றால், சமூக வலைதளப் பக்கம் சென்றால் போதும்... அனைத்தும் இணையத்தை மொய்த்து நிற்கும். அதிலும் ஆர்வக்கோளாறில் சற்றும் பின்விளைவுகளைப் பற்றி யோகிக்காமல் சர்ச்சைக்குரிய கன்டென்டுகள், தனிமனித தாக்குதல் என அனைத்தையும் தங்களுடைய வலைதள பக்கங்களில் பதிவேற்றி சிலர் வைரலாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் இளம்பெண் ஒருவர், தாம் வைத்திருக்கும் சூட்கேஸின் முனைப் பகுதியைச் சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதிலொரு ட்விஸ்ட் இருக்கிறது.
“ஒரு பை நிறைய கேக்கை நான் சாப்பிட்ட நாள் இன்று! சுற்றி இருப்பவர்களின் எதிர்வினைகளைப் பாருங்கள்...” என்கிற தலைப்புடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் தனது வெள்ளைநிற சூட்கேஸுடன் சுற்றித்திரிகிறார். திடீரென விமான நிலையத்தில் உள்ள இருக்கையில் அமரும் அந்த இளம்பெண் அவர் வைத்திருக்கும் சூட்கேஸின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிடத் தொடங்குகிறார்.
இதை பார்த்த சக பயணிகள் ‘என்னப்பா இது’ என அதிர்ச்சியில் திளைக்கிறார்கள். பின்னர் அந்த சூட்கேஸை, கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் பிய்த்து ருசித்து சாப்பிடுகிறார். இதைப் பார்க்கும் பயணிகள் சிலர், அப்படியே ஒருசில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனாலும், பின்னர் சிரிக்கிறார்கள். காரணம், அந்த இளம்பெண் சாப்பிட்டது சூட்கேஸ் வடிவில் இருந்த கேக்-ஐ! அதை சுதாரிக்க பார்ப்பவர்களுக்கு கொஞ்ச நேரம் ஆகிறது.
இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ (3 வாரங்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ) 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது. தவிர, ஏராளமான எதிர்மறை கருத்துகளையும் பெற்றுவருகிறது. இந்த வீடியோ எப்போது, எந்த நாட்டில் எடுக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அதேநேரம் இந்த இளம்பெண் இதுபோல நம்ப முடியாத பல பொருட்களின் வடிவங்களை கேக்கில் செய்துள்ளார். அவற்றை சாப்பிட்டு தன் இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டும் உள்ளார்.