model image x page
உலகம்

விபத்தில் இறந்த காதலர்.. வித்தியாசமான முடிவெடுத்த காதலி.. தைவானில் நடந்த ருசிகர சம்பவம்!

Prakash J

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் நெடுஞ்சாலையில் கடந்த ஜூலை 15ஆம் தேதி அடுத்தடுத்து 4 கார்கள் மோதின. இந்த விபத்தில் யூ என்கிற குடும்பப் பெயரைக் கொண்ட பெண்ணும், அவரது காதலரும் விபத்தில் சிக்கினர். அவர்களில் யூ-வின் காதலர் உயிரிழந்தார். காயங்களுடன் தப்பிய யூ, தனது காதலரைக் காப்பாற்ற முயன்றார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் யூவின் மனதைப் பெரிதும் வாட்டியது. இந்த நிலையில், தனது காதலரைக் நினைவுகூறும் விதமாகவும், அவரது வயதான தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் யூ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி யூ, இறந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ள முன்வந்துள்ளார்.

இதையும் படிக்க: எல்லை தாண்டிய காதல் | காதலரை மணமுடிக்க போலி ஆவணத்தில் பாக். சென்ற இந்தியப் பெண்; விசாரணையில் அம்பலம்

சீனாவில் இறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது 3000-ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. திருமணம் நடக்காமல் உயிரிழப்பவர்கள் அவர்களின் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது என நம்பப்படுவதால், இத்தகைய நடைமுறை இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய திருமணங்களில் ஆணோ, பெண்ணோ ஒருவர் உயிரோடு இருக்க இறந்தவரின் புகைப்படம் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருள்களை கொண்டு பாரம்பரிய திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதே நடைமுறையை தைவானும் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில்தான் இந்தப் பெண்ணும் தனது காதலரை மணக்க திட்டமிட்டுள்ளார். இவருடைய செயலை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பயனர் ஒருவர், “நெருக்கடியில் இருக்கும் மற்றவர்களைக் காப்பாற்ற நினைக்கும் இந்தப் பெண் மிகவும் துணிச்சலானவர்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "தன் காதலர் மற்றும் அவரது குடும்பத்தின் மீதான அவளது பொறுப்புணர்வு அவருடைய அன்பைக் காட்டுகிறது. ஆனால், பேய் திருமணம் என்பது ஆன்மிகம் கலந்த ஆறுதல் தரும் விஷயம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: India head coach | “லட்சுமணன்தான் சரியான ஆள்...” கவுதம் கம்பீரை கடுமையாகச் சாடிய பாகிஸ்தான் வீரர்!