உலகம்

’எங்க வீட்ல பெரிய சிலந்தி இருக்கு’ கண்ட்ரோல் ரூமுக்கு கால் செய்த பெண்ணால் கடுப்பான போலீஸ்!

’எங்க வீட்ல பெரிய சிலந்தி இருக்கு’ கண்ட்ரோல் ரூமுக்கு கால் செய்த பெண்ணால் கடுப்பான போலீஸ்!

JananiGovindhan

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து பொதுவாக போலியாக மிரட்டல் விடுப்பதும், ப்ராங் செய்வது அல்லது விநோதமான நிகழ்வுகளை தீர்த்து வைக்கச் சொல்லி கேட்பது வழக்கமாக நடக்கும்.

ஆனால், இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் யார்க் ‌ஷைன் காவல்துறைக்கு பெண் ஒருவர் ஃபோன் செய்து தனது வீட்டில் இருக்கும் சிலந்தியை விரட்டும்படி கேட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இது தொடர்பான உரையாடல்கள் குறித்த வீடியோ ஒன்றை வெஸ்ட் யார்க்‌ ஷைன் போலீசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், பெண் ஒருவர் “ஹாய், நீங்கள் இதை கேட்டு என் மீது கோபம் கொள்ள நேரிடும். இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. பலரிடம் தொடர்புகொண்டு கேட்டுவிட்டேன் யாருமே உதவ வரவில்லை. நீங்கள்தான் என்னுடைய கடைசி நம்பிக்கையாக இருக்கிறீர்கள்.

யாராவது இங்கு வந்து என் வீட்டில் இருக்கும் மிகப்பெரிய சிலந்தியை வெளியேற்றுங்களேன். நிஜமாகவே அது ரொம்ப பெரியதாக இருக்கிறது. நான் கிண்டலுக்காக சொல்லவில்லை” எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு போலீசார் தரப்பில், எல்லாராலும் 8 கால்களை கொண்ட சிலந்தியை வீட்டில் இருக்க அனுமதிக்க மாட்டார்கள்தான். அது எங்களுக்கு புரிகிறது. ஆனால் போலீசாரால் தற்போது உங்கள் வீட்டிலிருந்து சிலந்தியை வெளியேற்ற வர முடியாது.

உங்கள் வீட்டுக்கு வந்து சிலந்தியை விரட்டும் நேரத்தில் எங்காவது எவருக்கேனும் அவசர உதவி தேவைப்படுவோரை அணுக முடியாமல் போகலாம். 999 என்ற எண் உண்மையிலேயே அவசர தேவையோ அல்லது அபாயகரமான சூழ்நிலையில் உள்ளவர்களுக்காகவே இருக்கிறது. எனவே அழைப்பதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்” என கூறப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு நாளில் 120க்கும் மேற்பட்ட அழைப்புகள் 999க்கு வருகிறது. அவை எதுவுமே அவசர தேவையாக இல்லாமல் இதுப்போன்ற அழைப்புகளாகத்தான் வருகிறது எனவும் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவு வைரலாகவே, இணையவாசிகள் பலரும் சிலந்தியை விரட்ட கேட்ட பெண்ணின் முகவரியை கண்டறிந்து அவரிடம் அபராதம் வசூலியுங்கள். அப்போதுதான் இதுப்போன்று வேறு எவரும் செய்ய மாட்டார்கள் என பதிவிட்டு வருகிறார்கள்.