நவோகி ஹைகுடா எக்ஸ் தளம்
உலகம்

30 வயதில் கட்டாய கர்ப்பப்பை நீக்கம்! சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட ஜப்பான் அரசியல் தலைவர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 30 வயதில் கருப்பை அகற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Prakash J

உலகில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது நாடுகளில் ஜப்பானும் ஒன்றாக உள்ளது. சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துபோனது. 2022ஆம் ஆண்டுப் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டுக்கான பிறப்பு விகிதம் 5.1 விழுக்காடு குறைந்து 758,631ஆகப் பதிவானது. நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும் என்று சுகாதார அமைச்சகத்தின் ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது. இதையடுத்து, குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ”கருவுறுதல் தொடர்பான சமூகப் பிரச்னைகளைத் தீர்க்க 30 வயதிற்குப் பிறகு பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டும்" என ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா வீடியோ ஒன்றில் பேசியிருந்தது எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்த அந்த வீடியோவில், ”25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்துகொள்வதையும், 30 வயதில் கட்டாய கர்ப்பப்பை நீக்கம் (கருப்பையை அகற்றுவது) செய்வதையும் தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அவர்கள் குழந்தைகளைப் பெறுவதற்கும், குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்கும்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்| களத்தில் யார் யார்?.. அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

இது, வைரலான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இதுகுறித்து நடிகை சிசுரு ஹிகாஷி, “30 வயதிற்குள் குழந்தை பிறக்கவில்லை என்றால் இனப்பெருக்க திறனை பறிக்கும் எண்ணம் நகைச்சுவையாகக்கூட பயமுறுத்துகிறது. தவிர, குறைந்து வருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பிறப்பு விகிதம் பெண்களின் தவறா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதுபோல் எழுத்தாளர் இசுய் ஓகாவா, “நான் ஓர் அறிவியல் புனைகதை எழுத்தாளர், ஒரு பெண்ணின் கருப்பையை அகற்றும் கோரமான யோசனை அறிவியல் புனைகதை என்று விவரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடையவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கருப்பையை அகற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர், ”நான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான். ஆகையால் அவற்றை உண்மையில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்கு நான் வாதிடவில்லை. அவ்வளவு தூரம் செல்லும் எதையும் நாம் செய்யாதவரையில் சமூகக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று நான் கூற விரும்புகிறேன். எனது கருத்தை வாபஸ் பெறுவதுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேரளா|’கலெக்டர் சகோதரர்’ என அழைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்.. யார் இந்த என்.பிரசாந்த்? பின்னணி?