மழை வெள்ளம் குறித்த வானிலை அறிக்கையை முன்கூட்டியே தெரியப்படுத்தும் செய்தியாளர் ஒருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. காரணம் அந்த வீடியோவில் உள்ள விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகள் தான்.
இயற்கை பேரிடர்களை கூட முன்கூட்டியே கணித்துவிடும் காலம் இது. என்னதான் முன் கூட்டியே மக்களுக்கு இயற்கை பாதிப்புகள் குறித்து தெரியப்படுத்தப்பட்டாலும் பாதிப்புகளும் ஆங்காங்கே அதிகமாக உள்ளன. ஏதா புயல் ஒன்று வரப்போகிறது. சூறாவளி ஒன்று வரப்போகிறது என சொல்வார்களே தவிர அதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என பெரும்பான்மையான நேரங்களில் சொல்லப்படுவதில்லை. இதனால் புயலோ, மழையோ அடித்து நொறுக்கிய பின்பும் தான் அதன் தாக்கத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
சமீபத்தில் தென் கலிபோர்னியாயில் மிகத் தீவிரமான சூறாவளி ஒன்று உருவாக உள்ளதை முன்கூட்டியே வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூறாவளி குறித்த அறிவிப்பு செய்தித் தொலைக்காட்சி, ரேடியோ மூலம் தெரியப்படுத்தப்பட்டது. அப்படி வானிலை சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. காரணம் வீடியோ, அவ்வளவு அருமையான விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பெண் செய்தியாளர் ஒருவர் விளக்கி கூறுகிறார். அப்போது செய்தியாளரை சுற்றிலும் 3 அடி முதல் 9 அடி வரை வெள்ள நீர்மட்டம் உயர்கிறது. 3 அடி மட்டத்தில் நீர் இருக்கும்போது மக்கள் என்னென்ன பிரச்னைகளை சந்திப்பார்கள். எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை செய்தியாளர் விளக்குகிறார். அதற்கேற்றாற்போல் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயரும் வகையில் விஷூவல் காட்சிப்படுத்தப்பட்ட விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதேபோல நீர்மட்டம் 6 அடி அடியை எட்டும்போது அங்கிருந்த கார்கள் எல்லாம் தண்ணீரால் அடித்து நொறுக்கப்பட்டு மிதக்கின்றன. நீர்மட்டம் 9 அடி வரும்போது வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. தற்போது இந்த வீடியோவின் விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகளை இணையதளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர். வீடியோவும் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.