உலகம்

ஓவர் சிரிப்பும் உடலுக்கு ஆகாது: சிரித்து சிக்கலில் சிக்கிய இளம் பெண்!

webteam

மனிதனுக்குச் சிரிப்பு சிறந்த மருந்து, வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ’சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன்தான், அதனால அதிகமா சிரிங்க’- இதையும் சொல்வார்கள். ஆனால், இளம் பெண் ஒருவரின் ஓவர் சிரிப்பு, அவரைச் சிக்கலில் கொண்டு சேர்த்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 

சீனாவில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கவாங்ஸோவ் தெற்கு ரயில் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் இளம் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த அவர், அடிக்கடி ஓவராகவும் சிரித்தார். இதை சக பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் அவர் திடீரென சத்தமாக சிரிக்கத் தொடங்கினார். இங்குதான் சிக்கல் தொடங்கியது. சிரித்த அவரது தாடை ஒரு பக்கமாகத் திரும்பி நின்றுவிட்டது. கடும் வலியால் துடித்த அவரால், இப்போது சத்தம் போடவும் தாடையை திருப்பவும் முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது.

அந்த ரயிலில் லுயோ வென்ஷெங் என்ற மருத்துவரும் பயணித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்யும்படி சிலர் கோரிக்கை வைத்தனர். அவர் அந்தப் பெண்ணைக் கண்டதும் ஸ்ட்ரோக் வந்துவிட்டதாக நினைத்தார். பிறகு அவரிடம் பேச்சுக் கொடுத்தபோதுதான், அவர் தாடை ஒரு பக்கமாக நின்றுவிட்டதை அறிந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை செய்து அதை சரி செய்துள்ளார் அந்த டாக்டர். 

அந்த டாக்டர் கூறும்போது, ’அந்தப் பெண்ணால் பேச முடியாமலும் வாயை மூட முடியாமலும் இருப்பதை சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அறிந்தேன். பிறகு சிகிச்சை செய்தேன். அது கரெக்ட்டாக அதனிடத்துக்கு வந்துவிட்டது’ என்றார்.  

தான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு முறை, இதுபோல தாடை நின்றிருக்கிறது என்று தெரிவித்துள்ள அந்தப் பெண், டாக்டருக்கு நன்றி கூறியுள்ளார்.