சீனாவை சேர்ந்த நியானன் எனும் 40 வயது பெண் ஒரு செய்தி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்துள்ளார். 2022-ல் அவரது நிறுவனத்தில் அவரை வேறு பொறுப்பிற்கு மாற்றியதால், அதிக மன அழுத்ததை சந்தித்திருகிறார். வேலையை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவித்துவந்த நியானனுக்கு அவரது பெற்றோர் உதவ முன்வந்துள்ளனர். "நீ ஏன் உன் வேலையை விட்டுவிடக்கூடாது? நாங்கள் உன்னை நிதி ரீதியாக கவனித்துக்கொள்வோம்" என்று நியானனிடம் கூறியுள்ளனர்.
நியானனின் பெற்றோருக்கு 10,000 யுவானுக்கும் அதிகமான (இந்திய ரூபாய் மதிப்பில் 1.17 லட்சம்) ஓய்வூதியம் கிடைத்து வந்திருக்கிறது. அதிலிருந்து தங்கள் மகளுக்கு 4,000 யுவானை (ரூ.47,000) மாதாந்திர உதவித்தொகையாக தருவதாக கூறியுள்ளனர். இது நல்ல யோசனையாக இருப்பதாக நினைத்த நியானன், தனது வேலையை விட்டுவிட்டு 'முழுநேர மகள்' என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். தற்போது இந்த வேலை காதல் நிறைந்த பணியாக இருப்பதாக கூறும் நியானன், மகிழ்ச்சியுடன் ஒரு மாறுபட்ட தினசரி வழக்கத்தை மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி நியானன் அன்றாடம் காலையில் தனது பெற்றோருடன் ஒரு மணிநேரம் நடனமாடுவது, அவர்களுடன் மளிகைக் கடைகளுக்குச் செல்வது, மாலையில் தந்தையுடன் சேர்ந்து இரவு உணவு சமைப்பது, எலக்ட்ரானிக் தொடர்பான அனைத்து பணிகளையும் நிர்வகிப்பது என்றிருந்திருக்கிறார். மேலும் டிரைவராக இருந்து, மாதாமாதம் அவர்களை சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறார்.
தனது பெற்றோருடன் இருப்பது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் அவர் கூறுகிறார். இருப்பினும், இப்போதும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், அது தனக்கு மிகப் பெரிய அழுத்தத்தை தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதை அறிந்த அவரின் பெற்றோர், "உனக்கு பிடித்தமான வேலை கிடைத்தால், நீ அதற்குச் செல்லலாம். உனக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே இரு, எங்களுடன் நேரத்தைச் செலவிடு. இப்போது போல இருக்கலாம்" என்றுகூறுவதாக நியானன் கூறுகிறார்.
என்னா பேரண்ட்ஸ்ப்பா..!