உலகம்

71 ஆண்டுகளாக வானொலியில் பணி... கின்னஸ் சாதனை படைத்த 85 வயது மூதாட்டி!

71 ஆண்டுகளாக வானொலியில் பணி... கின்னஸ் சாதனை படைத்த 85 வயது மூதாட்டி!

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி மெக்காய் என்ற பெண், ‘70 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் பணியாற்றிய பெண்’ என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மேரி மெக்காய். தற்போது 85 வயதான அவர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் பணியாற்றிய பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளார். அதன்படி வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய பெண் என்ற கின்னஸ் சாதனையை மேரி மெக்காய் படைத்துள்ளார். அவர், 71 ஆண்டுகள் 357 நாட்கள் பணியாற்றி இருப்பதாக கின்னஸ் தெரிவித்துள்ளது.

அவருடைய சாதனை குறித்த அறிவிப்பை கின்னஸ் இணையதளம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த சாதனையில் இதற்கு முன்பு 68 ஆண்டுகள் பணியாற்றியதே சாதனையாக இருந்துள்ளது. அதை, தற்போது மேரி மெக்காய் முறியடித்துள்ளார். 1951இல் ஆரம்பித்த அவருடைய வானொலிப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. K-Star Country வானொலியில், வாரத்தின் 6 நாட்களில் தினம் இரண்டு மணி நேரம் கண்ட்ரி கிளாசிக்ஸ் (country classics) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

“வானொலி வேலையை மிகவும் நேசிக்கும் நான், அதை எப்போதும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை” என்று தெரிவித்திருக்கும் மேரி, “என் நினைவலைகளில் இருப்பது வானொலி வாழ்க்கைதான்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், “திறமையை வெளிப்படுத்தும் துறையில் பணி செய்வதே என்னுடைய கனவாக இருந்தது. அதற்கான நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தேன். 1951ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி KMCO என்ற வானொலி நிகழ்ச்சிக்கான ஆடிஷன்போது, 15 நிமிட பாடல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினேன். அதுமுதல் அந்த வானொலியில் பணியாற்றத் தொடங்கினேன்.

12 வயது முதல் வானொலி தொகுப்பாளராய் என்னுடைய பணியைத் தொடங்கினேன். இதனால் நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது வானொலி நிலையங்கள் மாறுபட்டிருந்தாலும், இன்றும் அந்தப் பணியைத் தொடர்ந்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேரி மெக்காய், தன் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணிக்கிடையேயும், இசைக்குழுவிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். எல்விஸ் பிரெஸ்லி மற்றும் அவரது இசைக்குழு கடந்த 1955 ஆம் ஆண்டு மேரி மெக்காயுடன் இணைந்து மேடையில் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்