வேலைப்பளு முகநூல்
உலகம்

தாய்லாந்து | மறுக்கப்பட்ட மருத்துவ விடுப்பு; பரிதாபமாக உயிரிழந்த பெண் ஊழியர்!

தாய்லாந்தில் 30 வயதான பெண் ஊழியர் தனது மேலாளரிடம் மருத்துவ விடுப்பு கோரிய நிலையில், அதனை மேலாளர் மறுக்கவே, அப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகம் முழுவதும் வேலைக்கும் வாழ்க்கைக்குமான சமநிலை குறித்தான பெரும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இன்னொருபக்கம் சமீபக்காலமாக பணிச்சுமையால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கிடையே பணி செல்லும் மகளிரின் வேலைப்பளு அதிகரிப்பது குறித்த சில அதிர்ச்சிகர தரவுகளும் வெளிவருகின்றன. இதற்கிடையே தற்போது தாய்லாந்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sick Leave

தாய்லாந்தின் சமுத் பிரகான் மாகாணத்தில் உள்ள டெல்டா என்ற எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார் 30 வயதான ‘மே’ என்ற பெண் ஊழியர் ஒருவர். இவருக்கு சமீபத்தில் பெருங்குடல் அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற கடந்த செப்டம்ப 5-9 வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.

இவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் அலர்ஜி, தீவிர நிலையை அடையவே, விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், செப்டம்பர் 12 ஆம் தேதி தனது மேலாளரிடம் தனது உடல் நிலை மோசமடைந்ததை தெரிவித்த மே, விடுப்பை மற்றொரு நாள் விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால், இவர் ஏற்கனவே அதிக நோய்வாய் விடுப்பு எடுத்ததன் காரணத்தால், மற்றொரு மருத்துவ சான்றிதழை பெற்று, அதனை அலுவலகத்தில் நேரடியாக வந்து சமர்பிக்க வேண்டும் எனவும், அதன் பின்னரே விடுப்பு வழங்கப்படும் என்றும் மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். மேலாளரின் நிர்பந்தத்தின் பேரில், உடல்நலமின்மையோடு செப்டம்பர் 13 அன்று, அலுவலகம் சென்றுள்ளார் மே.

Sick Leave

சென்ற வெறும் 20 நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அருகிலிருந்த அவரது நண்பர்கள் உடனடியாக மே-வை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், எதிர்பாரா விதமாக் அடுத்த நாள் ’நெக்ரோடைசிங் என்டோரோகோலிடிஸ்’ என்ற (NEC) ஒரு வகையான குடல் நோயால் மே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊழியரின் இறப்பு குறித்து டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அறிக்கை ஒன்றினை செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியிட்டது.

அதில், “எங்கள் பணியாளர் உயிரிழ்ந்திருப்பது எங்களுக்கு பேரிழப்பு. எங்கள் ஊழியர்கள்தான் இந்நிறுவனத்தின் வெற்றியின் அடித்தளம். இந்த நேரத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு எங்களின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் கிடைப்பின் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிச்சுமையால் உயிரிழந்த பல உயிர்கள்

இதுபோன்ற சம்பவம், தாய்லாந்தில் மட்டும் நடக்கவில்லை என்பதே நாம் கவனிக்க வேண்டியது. சமீபத்தில் சீனாவில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் பைக்கிலேயே உயிரிழந்த சம்பவம், லக்னோ வங்கி ஊழியர் பணியின்போதே உயிரிழப்பு, புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்ற ஐ.டி. ஊழியரின் திடீர் மரணம் என உலகம் முழுக்க நடக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகள் கார்ப்பரேட் நிறுவனங்களால் மறுக்கப்படுவதன் காரணமாக இப்படி உயிரிழந்த நபர்கள் ஏராளம் என்பதையே, இம்மரணங்கள் நமக்கு காட்டுகின்றன.

வேலைப்பளு

விடுப்பு என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமை. குறிப்பாக ஒரு தனிப்பட்ட தொழிலாளிக்கு என ஒதுக்கப்பட விடுப்புகளை, தவிர்க்க முடியாத நேரங்களில் எடுத்துக்கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உள்ளது.

உழைப்பு சுரண்டலும், உரிமைகள் பறிப்பும்

அதனால்தான் ஒவ்வொரு நிறுவனமும் Sick Leave, Casual Leave, Medical Leave என்று பல வகையான விடுப்புகளை இங்கே வைத்துள்ளன. இது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றார் போல மாறுபடும் என்றபோதும் உடல் நலக்குறைவு என தனக்கென ஒதுக்கப்பட்ட விடுப்புகளிலிருந்து ஒரு தொழிலாளி விடுமுறை வேண்டுமென கோரும்போது அதை கொடுப்பதே சரி. அதே போல, ஒவ்வொரு நிறுவனங்களிலும் ‘வேலை நேரம்’ என்று குறிப்பிடுவதற்கான காரணம், இந்த நேரத்திற்கு மேல், ஒரு தொழிலாளியின் மீது வேலையை திணிக்க கூடாது என்பதற்காகதான்.

மேற்கூரிய அனைத்தும் மீறப்படுமேயாயின் தொழிலாளர்களின் மீது வேலை பழுவை திணிப்பது மற்றும் அவர்களின் உரிமைகளை சுரண்டுவது போன்றவற்றின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றமாக மாறிவிடும்.

உரிமை

தொழிலாளர்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுடியது நிறுவனங்களின் கடமை என்பதால், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.