உலகம்

உக்ரைனை விரைவில் தாக்க தயாராகும் ரஷ்யா? - புதினின் புது வியூகம்!

உக்ரைனை விரைவில் தாக்க தயாராகும் ரஷ்யா? - புதினின் புது வியூகம்!

ஜா. ஜாக்சன் சிங்

'இனி உக்ரைன் போரை தவிர்க்கவே முடியாது' என்று தான் உலக நாடுகள் சில தினங்களுக்கு முன்பு வரை எண்ணி இருந்தன. உக்ரைனை ரஷ்யா தாக்கினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஒருபுறம் அமெரிக்காவும், நேட்டோ கூட்டணி நாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தன. மறுபுறம், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் இருக்கும் தங்கள் குடிமக்களை தாய்நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன. உக்ரைன் அதிபரோ ஒருபடி மேலே சென்று, ரஷ்யா தங்கள் மீது போர்த் தொடுக்கும் தேதியையே அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

உக்ரைன் விவகாரத்தில் உலகமே ஒரே மாதிரி சிந்தித்துக் கொண்டிருக்க, ரஷ்யாவின் அணுகுமுறையோ வேறு மாதிரியாக இருந்தது. பீரங்கி குண்டுகள் எந்நேரமும் வெடிக்கும் என எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், ரஷ்யா தனது ராணுவப் படைகளின் பெரும்பகுதியை உக்ரைன் எல்லையில் இருந்து திடீரென திரும்ப அழைத்துக் கொண்டது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. முதலில், உக்ரைன் கூட இந்த செய்தியை நம்ப மறுத்து, பிறகு தனது உளவுத் துறை மூலமாகவே ரஷ்ய படைகள் திரும்பிச் செல்வதை உறுதி செய்தது.

ரஷ்யாவின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்? அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடிபணிந்து விட்டாரா? இனி உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிடாதா? இவை தான் இன்று சர்வதேச அளவில் எழுப்பப்பட்டு வரும் முக்கிய கேள்விகளாக இருக்கின்றன.

உண்மையில், உக்ரைனை ஆக்கிரமிக்கும் விருப்பம் ரஷ்யாவுக்கு இருந்ததில்லை. குறிப்பாக, 2014-ம் ஆண்டு உக்ரைனில் இருந்து க்ரீமியாவை பிரித்ததை அடுத்து, இனி அந்த நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என்கிற முடிவை தான் ரஷ்யா எடுத்திருந்தது. பெரும்பாலான உலக நாடுகளில் இருந்து வந்த அழுத்தமும் ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ரஷ்யாவின் இந்த அணுகுமுறையை உக்ரைன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அதுவரை, ரஷ்யாவுக்கு பயந்து ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து சற்று விலகியே இருந்த உக்ரைன், அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளிடம் நெருக்கம் காட்ட தொடங்கியது. அப்போதும் அதனை ரஷ்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சமயத்தில் தான், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயற்சிப்பது ரஷ்யாவுக்கு தெரியவந்தது.

நேட்டோ கூட்டணி உருவான போதே, ரஷ்ய பிராந்தியம் அமைந்திருக்கும் கிழக்கு திசையை நோக்கி தங்கள் எல்லையை விரிவுப்படுத்த மாட்டோம் என அப்போதைய சோவியத் யூனியனிடம் நேட்டோ நாடுகள் உறுதி அளித்திருந்தன. எனினும், பிற்காலத்தில் தங்கள் வாக்குறுதியை அவை காப்பாற்றவில்லை. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, லிதுவானியா உள்ளிட்டவற்றை ரஷ்யாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டது நேட்டோ. இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு அமைதி காத்து வந்த ரஷ்யாவுக்கு, உக்ரைனும் நேட்டோ கூட்டமைப்பில் இணையப் போகிறது என்கின்ற செய்தி பெருங்கோபத்தை ஏற்படுத்தியது.

ஐரோப்பியாவில் மிகப்பெரிய நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால் அதைவிட பெரிய அச்சுறுத்தல் தனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை ரஷ்யா நன்றாகவே அறிந்திருந்தது. எனவேதான், சிறிதும் தாமதிக்காமல் களத்தில் இறங்கிய ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கியது.

ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், நேட்டோ நாடுகளும் ஒருசேர குரல் கொடுத்தன. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது மாபெரும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்தன. இதுதான் ரஷ்யாவை உக்ரைன் விவகாரத்தில் இருந்து சற்று பின்வாங்க செய்ய முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

அதேபோல, உக்ரைனை ஆக்கிரமித்து, அங்கு ரஷ்ய ஆதரவு அரசை அமைத்தாலும் பிற்காலத்தில் மக்கள் புரட்சி வெடித்தால் அதனை சமாளிப்பது தனக்கு மிகப்பெரிய தலைவலி என்பதையும் அதிபர் புதின் யோசித்திருக்கலாம். 2014-இல் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை ஒடுக்க கோடிக்கணக்கான பணத்தையும், படை வீரர்களையும் ரஷ்யா இழக்க வேண்டியிருந்தது. மீண்டும் அப்படியொரு போராட்டத்தை எதிர்கொள்ள ரஷ்யா விரும்பவில்லை.

இவையனைத்தையும் யோசித்து பார்த்து தான், உக்ரைனுடன் நேரடியாக போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா கைவிட்டிருக்கிறது. அதே சமயத்தில், உக்ரைனை விட்டு வைக்கும் எண்ணமும் ரஷ்யாவுக்கு இல்லை. அதனால் தான், உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை வாபஸ் வாங்கினாலும் அந்த நாட்டின் நாலாபுறமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களையும், 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் ரஷ்யா நிறுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, உக்ரைனை சுற்றியிருக்கும் கருங்கடலில் 40 போர்க் கப்பல்களும், உக்ரைனுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகளும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றை பார்க்கும்போது, தனது படைகளை திரும்பப் பெறுவது ரஷ்யா நடத்தும் நாடகம் என்பது தெளிவாகிறது. இது தெரிந்ததால் தான், "உக்ரைனை இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்கும்" என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறுதியிட்டு கூறி வருகிறார்.

அதே சமயத்தில், இந்த முறை உக்ரைன் மீது நேரடியாக ரஷ்யா போர் தொடுக்காது எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைனை மறைமுகமாக தாக்க இரண்டு வியூகங்களை ரஷ்ய அதிபர் புதின் வகுத்திருப்பதாகவும் அமெரிக்க உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நிரம்பியிருக்கும் டான்போஸ் பிராந்தியத்தை வைத்து தான் இந்த தடவை தனது அரசியல் காய்களை நகர்த்த தயாராகி வருகிறது ரஷ்யா. அதன்படி, டான்போஸ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி அமைப்புகளிடம் பேசி, தங்கள் படையினர் மீது தாக்குதல் நடத்துவது போல நடத்த செய்து, பின்னர் பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்த பிராந்தியத்தின் வழியே உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை கைப்பற்றுவது விளாடிமிர் புதினின் முதல் வியூகமாக இருக்கிறது.

அப்படி இல்லையெனில், டான்போஸில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு பெருமளவு பணத்தையும், ஆயுதங்களையும் வழங்கி, உக்ரைனில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி, அங்கு தற்போது இருக்கும் அரசை கவிழ்ப்பது என்பது விளாடிமிர் புதினின் மற்றொரு வியூகமாக இருக்கிறது. அதனால்தான், நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின், ''உக்ரைனை ரஷ்யா முதலில் தாக்காது' என்ற சொல்லாடலை பல முறை பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டுகிறது அமெரிக்க உளவுத் துறை.

ரஷ்யா பின்வாங்குவதாகவே இப்போது ஐரோப்பிய நாடுகளும், நேட்டோ நாடுகளும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. எந்த வேகத்தில் ரஷ்யா பின்வாங்குகிறதோ, அதை விட பல மடங்கு வேகத்தில் தாக்குதல் நடத்த சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார் விளாடிமீர் புதின்.

புலி வாலை பிடித்துவிட்டது உக்ரைன்; இனி தப்பிப்பது சுலபம் அல்ல!