அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் ட்ரம்ப்பின் வெற்றி இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், ட்ரம்ப்பின் பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி இருக்கும் என்பதால், இது இந்தியர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகித்தபோது அவரது பொருளாதார கொள்கைகள் அனைத்தும் அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியே இருக்கும். இது மற்ற நாடுகளுக்கு பாதகமாக அமையலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.
உதாரணத்துக்கு தன் கடந்த ஆட்சிக் காலத்தில் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு முறையை கொண்டுவந்தார் ட்ரம்ப். மேலும், இந்தியாவின் வரி விதிப்பு முறைகளை கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்தும் உள்ளார். அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த வரி விதிக்க வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்தது.
ட்ரம்ப் எதிர்பார்ப்பது போல, அமெரிக்காவிற்கு வரி சலுகைகளை இந்தியா அமல்படுத்தினால் அது இந்தியாவின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவிற்கு இந்த சிக்கல் இருப்பது போல சீனாவிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது சீனா மீதான பொருளாதார கொள்கைகளை ட்ரம்ப் அரசு கடுமையாக்கினால் அது இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
மறுபுறம், ட்ரம்ப்பின் வருகை H1B விசா நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தி, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குடியுரிமை கனவை பாதிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் வேலை கிடைத்து ஹெட்ச் ஒன் பி விசாவிற்கு காத்திருக்கும் இந்தியர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டவர்களை காட்டிலும் அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது ட்ரம்ப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இது ஹெட்ச் ஒன் பி விசா மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாகும் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், ட்ரம்ப் ஹெட்ச் ஒன் பி விசா நடைமுறையை கடுமையாக்குவார் எனவும் கணிக்கப்படுகிறது.
ஹெட்ச் ஒன் பி விசா நடைமுறையை கடுமையாக்கும் பட்சத்தில் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அதிக அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த அதிக வாய்ப்புள்ளதால் இது இந்திய IT துறையில் சலலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கும் நல்ல நட்பு இருந்தாலும், ட்ரம்ப் இந்திய கொள்கைகளை கடந்த காலங்களில் விமர்சித்துள்ளார். எனவே நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் இனி அமெரிக்காவால் என்னென்ன மாற்றங்களை நிகழும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!