இலங்கையில் கூடிய விரைவில் ஆட்சியைப் பிடித்துக் காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கொழும்புவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, விகாரமகாதேவி பூங்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, குண்டுவெடிப்பிற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாகக் குற்றம்சாட்டினார். “ இலங்கையில் போர் காலம் முடிவடைந்த 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு நாட்டை நேசிக்கும் தலைவர் அவசியம். இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. என்னுடைய ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்”எனத் தெரிவித்தார்.