ஆஸ்கர் விழாவில் 10 ஆண்டுகள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை, ‘மனதார ஏற்றுக்கொள்வதுடன், அகாடெமியின் இந்த முடிவுக்கு மரியாதை அளிக்கிறேன்’ என்று உருக்கமுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 94-வது ஆஸ்கர் அகாடெமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. மிக உயரிய விருதாகக் கருதப்படும் இந்த விருதினைப் பெற, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்கள் ஆர்வம் காட்டுவர். இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழாவில், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடியை பற்றி, தொகுப்பாளரும் நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தலைமுடியை இழந்து வருவதால், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் மொட்டை அடித்திருந்திருந்தநிலையில், அவரை ‘ஜி.ஐ. ஜேன்’ படத்தின் கதாநாயகியுடன் ஒப்பிட்டு, கிறிஸ் ராக் பேசினார். இதனால், கோபமடைந்த வில் ஸ்மித், இருக்கையிலிருந்து கிறிஸ் ராக்கை பார்த்து கடுமையாக பேசியதுடன், மேடைக்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் வைரலாகியது.
இதையடுத்து வில் ஸ்மித்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர கிடைத்தாலும், அவர் அகாடெமி விருது நடத்தும் நிறுவனத்திடம் மன்னிப்பு கோரினார். பின்னர், 2021-ம் ஆண்டு ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக முதன்முறையாக சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தால் ஆஸ்கர் அகாடெமி உறுப்பினர் பதவியிலிருந்து, சில நாட்களில் வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.
இந்த சம்பவத்திற்குப்பிறகு விசாரணை நடத்திய அகாடெமி ஆப் மோஷன் பிக்ச்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ், வில் ஸ்மித்திற்கு, நேற்று முதல் 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடையால், ஆஸ்கர் விருதுகள் அல்லது ஆஸ்கர் சம்பந்தமான வேறு எந்த விழாவிலும், நடிகர் வில் ஸ்மித் நேரடியாகவோ, ஆன்லைனிலோ கலந்துகொள்ள முடியாது.
இது குறித்து அறிக்கை அளித்த அகாடெமியின் தலைவர் டேவிட் ரூபின், தலைமை செயல் அதிகாரி டான் ஹட்சன் தெரிவித்திருந்ததாவது, “கடந்த ஒரு வருட காலமாக கடுமையாக உழைத்து இந்த விருதுகளை பெற்று சாதனை படைத்த அனைவரும், அவர்களது மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் வில் ஸ்மித் செய்த மோசமான செயலால், பலரது கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் எங்களால் பலரின் உன்னதமான தருணங்களை காட்டமுடியவில்லை, இதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். இது எங்கள் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் உலகம் முழுக்க பரவியிருக்கும், எங்கள் அகாடெமியை சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அசாதாரண சூழ்நிலையில் அமைதியைக் காத்ததற்காக கிறிஸ் ராக்கிற்கு நன்றியும்” ஆஸ்கர் அகாடெமி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடெமியின் இந்த முடிவை மனதார ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள வில் ஸ்மித், அகாடெமியின் இந்த முடிவை மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 53 வயதை தொட்டுள்ள வில் ஸ்மித் திறமையான நடிகர். ஆனால் இந்த தடையால், இனி வரும் காலங்களில் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் போகலாம் என எண்ணிய நிலையில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை மற்றும் விருது பெறுவது பாதிக்காது என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை ஆஸ்கர் விருது இனி அவருக்கு அறிவிக்கப்பட்டாலும், விழாவில் நேரடியாக அவரால் கலந்துகொண்டு வாங்க முடியாது. இந்த வருடம் வழங்கப்பட்ட விருதையும் அவரே வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.