உலகம்

கொரோனா குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர்‌ உயிரி‌ழப்பு : சீன மக்கள் கொந்தளிப்பு

கொரோனா குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர்‌ உயிரி‌ழப்பு : சீன மக்கள் கொந்தளிப்பு

webteam

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலில் தகவல் வெளியிட்டு எச்சரித்த மருத்துவர் கொரோனா பாதிப்பாலேயே உயிரிழந்த நிலையில் அவருக்கு மக்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்த வைரஸ் குறித்து முதன்முதலில் மக்களை எச்சரித்த மருத்துவர் உயிரிழந்தது சீன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உகான் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சீன மருத்துவர் லீ வென்லியாங், ‌கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியே கொரோனா பரவுவது குறித்து சமூக வலைதளங்களில் சில ஆவணங்களை வெளியிட்டு எச்சரித்தார்.

ஆனால் மருத்துவர் லீயின் பதிவுகள் மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி ஜனவரி 1 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். வெளிவந்த உடனேயே வுகான் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் கொரோனா பாதிப்புள்‌ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இறங்கினார். இதையடுத்து ஜனவரி 10 ஆம் தேதி கொரோனா தொற்றால் அவரும் பாதிக்கப்பட்டார். கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் லீ உயிரிழந்தார். லீயின் உயிரிழப்பு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது எச்சரிக்கைகளை அரசு சரிவர கவனித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்பில் சிக்கியிருக்க மாட்டார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி ‌வருகின்றனர்.

மக்கள் அதிகளவில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் லீயின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, அவர் பணி புரிந்து இறந்த மருத்துவமனைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து பூங்கொத்துக்களை மக்கள் அனுப்பி வருகின்றனர்.

மேலும் இரவு 9 மணியளவில் வுகான் மக்கள் அனைவரும் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து மருத்துவர் லீக்காக‌ துக்கம் அணுசரித்தனர்.