உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள கர்ஸ்க-கில் வடகொரியாவை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளாக ஓயாத போருக்கு இடையில் இது என்ன புது குழப்பம் என அமைதி விரும்பும் உலகம் கேள்வியெழுப்புகிறது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் இதனை உறுதி செய்கிறது. ஆனால் அவர்கள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உதவ நிற்கிறார்களா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போருக்கு உதவ ஆட்களை அனுப்பியது மட்டுமல்ல ஆயுத விநியோகத்திலும் வடகொரிய உதவி செய்வதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
1953-ஆம் ஆண்டு கொரிய யுத்தம் முடிவுக்கு வந்த பின், தென்கொரியாவை எதிர்கொள்ளும் திட்டமாக ஆயுத உற்பத்தியை பன்மடங்கு பெருக்கியிருக்கிறது வடகொரியா. அமெரிக்காவை கடுமையாக எதிர்ப்பதன் மூலம், மற்றொரு புறம் ரஷ்யாவை நோக்கி நட்புக் கரம் நீண்டது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்துவது உரிமைக்கான புனிதப் போர் என வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சன் குய் தெரிவித்துள்ளார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைத் தவிர்த்து, படைகளை அனுப்புவதால் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ன்னு என்ன லாபம் இருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
இரும்புத்திரை நாடான வடகொரியாவின் நகர்வுகள் எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. என்றாலும் தன் ஆட்சியை தக்க வைக்க, படை வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அனுப்பி காய் நகர்த்துகிறார் கிம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். மற்றொரு வரலாறும் இருக்கிறது.
வடகொரியாவை சேர்ந்த ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மரம்வெட்டிகள் ரஷ்யாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதி கிம் அரசை காப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது வடகொரிய மக்கள் செலுத்தும் விசுவாசம் அந்தளவுக்கு பெரியது. மேலும் ரஷ்யாவில் உள்ள வடகொரிய ராணுவ வீரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாத ஊதியமாக ரஷ்யா வழங்குவதாக தென்கொரியா கூறுகிறது. வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளுக்கு ரஷ்யா தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
இதனை நம்பும்வகையில், வடகொரியாவின் யோங்பியான் நகரில் ரஷ்யாவின் கூட்டுழைப்புடன் 1960 ஆம் ஆண்டிலேயே அணு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. பணம், ஆயுதம், அணுசக்தி என பல்வேறு காரணங்களின் பின்னணியில் வடகொரியா ரஷ்யா பக்கம் நிற்கிறது.