முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர் twitter
உலகம்

மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்துகொண்ட நகர மேயர்! எதற்காகத் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி!

மெக்சிகோ நாட்டின் நகர மேயர் பாராம்பரிய முறையில் முதலையை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Prakash J

மெக்சிகோ நாட்டின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரம் உள்ளது. இது, சோண்டல் பழங்குடி மக்களின் நகரமாக உள்ளது. இந்நகரத்தின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா என்பவர் உள்ளார். இவர் அலிசியா அட்ரியானா என்ற முதலையை திருமணம் செய்துகொள்ள பழங்குடி பாராம்பரிய முறையில் சடங்குகள் நடைபெற்றன. இரண்டு பழங்குடியினக் குழுக்கள் இடையே சமாதானத்திற்கு வரும் வகையில் 230 ஆண்டுகளாக இந்தச் சடங்குகள் அப்பகுதியில் நடந்து வருகின்றன. சொந்தல் மற்றும் ஹுவேவ் ஆகிய இரு உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான அமைதிக்கான ஓர் அடையாளம் தான் இந்த திருமணம்.

முதலையுடன் மேயர்

இந்த திருமணத்தால் அதிர்ஷ்டம் வந்துசேரும் என நம்பப்படுகிறது. ஒரு சோண்டல் மன்னர், ஹுவேவ் பழங்குடியினக் குழுவின் இளவரசியை மணந்தபோது இரண்டு பழங்குடி சமூகங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த விரோதம் முடிவுக்கு வந்தது எனச் சொல்லப்படுகிறது.

இந்தத் திருமண விழாவிற்குமுன், மணம் செய்துகொள்ளப்படும் பெண் முதலைக்கு இளவரசி போன்று ஆடைகள் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர்களது கைகளில் வைத்து நடனமாடப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, முதலையின் வாய் திருமணத்திற்கு முன்பே கட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஹ்யூகோ சோசா, “நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். காதல் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள முடியாது. இளவரசியை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வரலாற்றாசிரியர் ஜெய்ம் ஜராத்தே, ”இந்தத் திருமணம் மழைப் பொழிவையும் அதிக விளைச்சலையும் கொடுக்கும்; சோண்டல் மக்களிடையே அமைதியும் நல்லிணக்கம் நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார்.

முதலையுடன் மேயர்

திருமணத்திற்குப் பிறகு, மேயர் சோசா தனது மணமகளுடன் (முதலையுடன்) பாரம்பரிய இசைக்கு நடனமாடினார். நடனம் முடிந்ததும், மேயர் இளவரசி முதலைக்கு முத்தமிட்டார். "இரண்டு கலாசாரங்களின் ஒற்றுமையை நாங்கள் கொண்டாடுவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

நம்மூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதைப் போன்று, மெக்சிகோவில் மேயர் முதலையைத் திருமணம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.