உலகம்

நம்ம ஊரு 90s kidsக்கே டஃப் கொடுக்கும் தென் கொரியர்கள்: எதில் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

நம்ம ஊரு 90s kidsக்கே டஃப் கொடுக்கும் தென் கொரியர்கள்: எதில் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

JananiGovindhan

இன்ஸ்டா, ஃபேஸ்புக்கை திறந்தாலே கல்யாணம் ஆகலையே என்ற 90ஸ் கிட்ஸ்களின் புலம்பல்களை கடக்காத நாளே இருக்காது. அதேவேளையில் 2k கிட்ஸ்களின் திருமண ஃபோட்டோக்கள் வீடியோக்கள் பார்த்து புகைச்சல் மீம்ஸ்களை பரப்பாத பகிராத 90ஸ் கிட்ஸ்களே இருக்க மாட்டார்கள்.

இப்படியாக நிலை இருக்க, இளைஞர்கள் திருமணம் செய்துக் கொள்ளவே தயாராக இல்லாத நாடும் இதே உலகத்தில்தான் உள்ளது. அப்படிப்பட்ட நாட்டை பற்றியும், திருமணத்தை இளைஞர்கள் புறக்கணிப்பதற்கான காரணத்தை பற்றியும்தா தற்போது பார்க்க போகிறோம். 

'K' ட்ராமாக்களுக்கும், பாப் இசையான BTS பாடல்களுக்கும் பிரபலமான தென் கொரியாவைச் சேர்ந்த இளைஞர்கள்தான் கல்யாணம் என்று சொன்னாலே தலதெறிக்க ஓடுகிறார்களாம். தென் கொரியாவில் இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது அந்த நாட்டின் திருமண விகிதம்.

அதன்படி, தென்கொரியாவில் சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 7.2 மில்லியனாக இருக்கிறதாம். அதாவது 72 லட்சம் பேர். 2000ம் ஆண்டில் 15.5% ஆக இருந்த திருமணம் செய்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 40 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் அப்போது 5ல் இருவர் சிங்கிளாக இருப்பார்கள் என்றும் தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கூற்று மூலம் அறிய முடிகிறது.

அரசால் திருமணத்துக்கான வயதை மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்றும், மக்களை திருமணம் செய்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, தென் கொரியாவில் 5 ஆண்டுகளுக்கும் கீழ் திருமணமாகி வாழ்வோரின் எண்ணிக்கை 18.8% பேர்தான் இருக்கிறார்களாம். இதனிடையே 17.6 சதவிகிதம் பேர் 30 ஆண்டுகளாக திருமணமே செய்துக்கொள்ளாமலும் வாழ்ந்து வருகிறார்களாம்.

மேலும், திருமணமான 12 சதவிகித மக்கள் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதே பெரிய சுமையாக இருப்பதாகவே கருதுகிறார்கள். 25 சதவிகித மக்கள், தங்களுக்கு ஒரு துணையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அந்த துணையின் தேவையை உணரவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் திருமணம் செய்துக்கொண்டு வாழ்வதற்கு பதில் தனியாக வாழ்வதையே பெரும்பாலான தென்கொரிய இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தென்கொரிய மக்கள் ஏன் திருமணம் செய்து வாழ்வதில் குழப்பமாக இருக்கிறார்கள் என்றும், தனியாக வாழ விரும்புவதன் நோக்கம் என்ன என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வியாக இருக்கிறது. அதன்படி நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு குடும்ப பொறுப்பை ஏற்க பயமாக இருப்பதாலேயே தென் கொரிய மக்கள் திருமணம் செய்துக்கொள்வதில்லையாம். மேலும் வேலை இல்லாமல், பெருகி வரும் செலவுகளை தாங்க முடியாமலும் திருமண வாழ்வின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.