உலகம்

விளாடிமிர் புடின் vs எலான் மஸ்க் -உண்மையில் சண்டை நடந்தால் என்ன நடக்கும்?

விளாடிமிர் புடின் vs எலான் மஸ்க் -உண்மையில் சண்டை நடந்தால் என்ன நடக்கும்?

ஜா. ஜாக்சன் சிங்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சண்டைக்கு அழைத்திருப்பது சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், ஒருவேளை, உண்மையில் இருவருக்கும் இடையே சண்டை நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ஒரு சிறு அலசலை இங்கு காண்போம்.

ஜூடோ வித்தகர் புடின்

ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் ஒரு தற்காப்பு கலை நிபுணர் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். தனது 11 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையான ஜூடோவில் சேர்ந்தார் புடின். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, ஜப்பானிலும், ரஷ்யாவிலும் மட்டுமே ஜூடோவுக்கு பாரம்பரியமிக்க கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆறு ஆண்டுகள் கடும் பயிற்சியை அடுத்து, ஜூடோவில் புடின் பிளாக் பெல்ட் வாங்கினார்.

பலர் பிளாக் பெல்ட்டுடன் தங்கள் பயிற்சியை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், புடினோ ஜூடோவில் விடாமல் பயிற்சி செய்து வந்தார். இவ்வாறு படிப்படியாக தனது 25 வயதுக்குள்ளாகவே ஜூடோவில் 7-வது டிகிரி பிளாக் பெல்ட்டை பெற்று விட்டார் விளாடிமிர் புடின். புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஒரே ஒரு பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் 20 ஜூடோ வீரர்களை 7-வது டிகிரி பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஒரு நபர், சில நிமிடங்களிலேயே வீழ்த்தி விடுவார். ஜூடோவில் தலைசிறந்த வீரராக திகழ்ந்த புடின், சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் சேர்வதற்கும், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கும் அவரது தன்னிகரற்ற ஜூடோ வித்தைகளும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கராத்தே, ஜிஜுட்ஸு கலைகளில் கரைக் கண்ட எலான் மஸ்க்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜூடோ கலையில் தலைசிறந்தவர் என்றால், எலான் மஸ்க் கராத்தே, பிரேஸிலியன் ஜிஜுட்ஸு கலைகளில் கரைக்கண்டவர் ஆவார். இவரும் சிறு வயது முதலாகவே இந்த தற்காப்புக் கலைகளை கற்று தேர்ந்திருக்கிறார். கராத்தே என எடுத்துக் கொண்டால், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டைல்கள் இருக்கின்றன. அவற்றிலேயே மிக மூர்க்கமான ஸ்டைலாக கருதப்படும் 'க்யோகுஷின்' என்ற கராத்தே ஸ்டைலில் பிளாக் பெல்ட் வாங்கியிருப்பவர் எலான் மஸ்க்.

அதுமட்டுமல்லாமல், பிரேஸிலியன் ஜிஜுட்ஸு தற்காப்புக் கலையிலும் பிளாக் பெல்ட்டை எலான் மஸ்க் பெற்றிருக்கிறார். பிரேஸிலியன் ஜிஜுட்ஸு என்பது ஜூடோவில் இருந்து பிரிந்து சென்ற கலையாகும். ஜூடோவை போன்ற லாக் அண்ட் கீ சண்டை முறையையும், எதிராளியை தூக்கி வீசும் பயிற்சி முறையையும் கொண்டது பிரெஸிலியன் ஜி ஜுட்ஸு.

இப்போது ஒரு பேச்சுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிர் புடினுக்கும், எலான் மஸ்க்குக்கும் உண்மையாகவே சண்டை நடக்கிறது என வைத்துக் கொள்வோம். ஒருவேளை, இது லாக் அண்ட் கீ சண்டை முறையிலான (மல்யுத்தம் போன்று) சண்டை என எடுத்துக் கொண்டால் புடினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஜி ஜுட்ஸுவை ஒப்பிடுகையில் ஜூடோ அதன் தாய் கலை என்பதால் அதில் வித்தைகள் கூடுதலாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, புடின் 7-வது டிகிரி பிளாக் பெல்ட்டை பெற்றிருப்பதால் மூன்று நிமிடங்களுக்குள் அதாவது முதல் ரவுண்டிலேயே விளாடிமிர் புடின் எலான் மஸ்க்கை மண்டியிட செய்து விடுவார் என தற்காப்புக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

எம்எம்ஏ-வில் எலானுக்கே வெற்றி

அதே சமயத்தில், எம்எம்ஏ எனப்படும் கலப்பு தற்காப்புக் கலை சண்டையில் இருவரும் மோதிக் கொண்டால் எலான் மஸ்கே வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், ஜூடோ, ஜிஜுட்ஸுவை போல அல்லாமல், எம்எம்ஏ சண்டையில் குத்துவதற்கும் (பஞ்ச்), உதைப்பதற்கும் (கிக்) அனுமதி இருக்கிறது. அப்படியென்றால், க்யோகுஷின் கராத்தே வித்தகரான எலான் மஸ்க், 5 நிமிடங்களுக்குள்ளாகவே புடினை வீழ்த்தி விடுவார் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் எலான் மஸ்க் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜூடோ கலைஞரான புடினை ஃப்ரண்ட் கிக் முறையை பயன்படுத்தி (Front Kick) அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை கடைப்பிடித்தால் மட்டுமே புடினை எலான் வீழ்த்த முடியும். ஒருவேளை, புடின் அருகில் வந்து எலான் மஸ்கை ஜூடோ முறையில் லாக் செய்துவிட்டால், எலான் மஸ்க்கின் கதை முடிந்தது என்கிறார்கள் எம்எம்ஏ நிபுணர்கள்.

ஆனால், இதில் முக்கியமாக இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் தற்காப்பு கலை ஜாம்பவான்கள். எலான் மஸ்க் பொழுதுபோக்குக்காகவும், தற்காப்புக்காகவும் சண்டை கற்றவர். ஆனால், விளாடிமிர் புடினோ தொழில்முறை தற்காப்புக் கலைஞர். தனது உளவுப் பணிகளின் போதே நிஜ தருணத்திலும் ஜூடோவை அவர் பல தடவை உபயோகித்தவர். ஆபத்தான சூழல்களை கடந்து வந்தவர். 7-வது டிகிரி பிளாக் பெல்ட் எனும்போது அவருக்கு ஒரு லட்சத்குக்கும் மேற்பட்ட லாக் அண்ட் கீ முறைகள் தெரிந்திருக்கும். எனவே, உண்மையிலேயே புடினுடன் மோதுவது எலான் மஸ்குக்கு டேஞ்சர் தான் என்கிறார்கள் தொழில்முறையாக தற்காப்புக் கலையை கற்றுக் கொடுப்பவர்கள்.