உலகம்

அமெரிக்க படைகள் கொன்ற ஈரானின் ஹீரோ குவாசிம் சுலைமானி ! யார் இவர் ?

அமெரிக்க படைகள் கொன்ற ஈரானின் ஹீரோ குவாசிம் சுலைமானி ! யார் இவர் ?

jagadeesh

அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமானி யார்? ஈரானின் சக்திவாய்ந்த நபராக குவாசிம் சுலைமானி உருவானது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

குவாசிம் சுலைமானி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் எதிரி, ஆனால் ஈரானின் ஹீரோ. ஈரானின் மறைமுக எதிர்க்கட்சி தலைவராகவே அறியப்பட்டார். ஈரான் புரட்சிகர ராணுவ பிரிவு 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஈரான் அரசியல், ராணுவம் , பொருளாதாரம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அமைப்பு தான் புரட்சிகர ராணுவபிரிவு. இதில் உச்சபட்ச அதிகாரம் கொண்டதே குத்ஸ் படை. குத்ஸ் படை வெளிநாடுகளில் ஈரான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும். வறுமையான குடும்பத்தில் பிறந்த குவாசிம் சுலைமானி பின்னாளில் ராணுவத்தில் இணைந்தார். 1998-ஆம் ஆண்டு முதல் குத்ஸ் படைக்கு தலைமை தாங்கி வந்தார்.

ஈரான் படைகளை வலுப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஹெஸ்புல்லா அமைப்பு மற்றும் ஷியா பிரிவு படைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியவர். ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிரியா அரசு படைகளுக்கு உதவியவர். ஈராக்கிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்கான யுக்திகளை வடிவமைத்து கொடுத்தவர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இவரை கொல்ல கடந்த 20 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்தது. இவர் மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, குத்ஸ் படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த படையினர் அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியது.

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவர் குவாசிம் சுலைமானி. அயதுல்லா அலி கமேனியுடன் பல பொது நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு ஈரானில் நடந்த விமான விபத்து மற்றும் 2012இல் சிரியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் பின்னாளில் அது பொய்யானது. தற்போது அமெரிக்க படையினரின் தாக்குதல் சுலைமானி கொல்லப்பட்டிருக்கிறார். இதனை ஈரானும் உறுதி செய்துள்ளது. கிட்டதட்ட ஒரு படை தளபதியையே இழந்துள்ள ஈரான் இதற்கு தக்க பதிலடியை அமெரிக்காவுக்கு கொடுக்கும் என சொல்லப்படுகிறது.