பறவைக்காய்ச்சல் - எச்சரிக்கை விடுக்கும் WHO puthiya thalaimurai
உலகம்

அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல்; எச்சரிக்கை விடுக்கும் WHO

அமெரிக்காவில் உயரும் பறவைக்காய்ச்சல் அபாயம்; பறவைகளைத் தொடர்ந்து ஆடுமாடுகளுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Jayashree A

H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை கூறியுள்ளது.

ஜெனீவாவில் ஒரு ஊடக சந்திப்பில், உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காய்ச்சல் திட்டத்தின் தலைவர் வென்கிங் ஜாங் பேசுகையில், “H5N1 என்ற பறவைக்காய்ச்சலானது பறவைகளிடமிருந்து, தற்பொழுது ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு பரவியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் இந்தவகை வைரஸ் அதிக அளவு இருக்கிறது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம்

இதற்கு முன்னதாக தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் (brown skuas) இறந்ததை அடுத்து, அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர்.

இதன் தொடர்சியாக, அமெரிக்காவில் பறவைகாய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், பறவைக்காய்ச்சல் என்று சொல்லப்படும் AH5N1 என்ற வைரஸ் அமெரிக்காவில் இரு மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இது குறித்து மருத்துவ ஆராய்சியாளர்கள், “பரவி வரும் பறவைக்காய்ச்சலின் தாக்கம் கொரோனாவை விட மிக மோசமானதாகவும் 100 மடங்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸில் இந்த வகை வைரஸ் மிகவேகமாக பறவைகளிலிருந்து ஆடுமாடுகளுக்கு பரவிவருகிறது என்றும், பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து பெறப்படும் பச்சைப்பாலில் அதக அளவு H5N1 வைரஸ் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் WHO கவலைத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தவகை வைரஸ் பாலில் எத்தனை காலம் உயிருடன் இருக்கும் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A(H5N1) முதன்முதலில் 1996 இல் தோன்றியது. ஆனால் 2020 முதல், பறவைகளிடையே எண்ணிக்கையில் அதிவேகமாக வளர்ந்தது. இதன் பரிமாண வளர்ச்சியாக தற்பொழுது பறவைகளிலிருந்து பாலூட்டிகளுக்கும் இந்தவகை வைரஸ் பரவி வருகிறது.

“பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட பால் (pasteurized milk) மற்றும் பால் பொருட்களை மட்டுமே உட்கொள்வது உட்பட பாதுகாப்பான உணவு நடைமுறைகளை மக்கள் உறுதிப்படுத்துவது முக்கியம்" என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுரை கூறியுள்ளது.