trump x page
உலகம்

அமோக வெற்றி | தொழிலதிபர், தொலைக்காட்சி பிரபலம் To மீண்டும் அமெரிக்க அதிபர் ! யார் இந்த ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் நாற்காலியில் மீண்டும் அமர இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். அவரது பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்...

PT WEB

அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய பின்னணி குறித்துப் பார்ப்போம்.

உலகம் கண்டிராத அரசியல் பாணி!

டொனால்டு ட்ரம்ப்பின் அதிரடி அரசியல் பாணி உலகம் கண்டிராதது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க எல்லை முழுவதும் பெருஞ்சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறியவர் . கொரோனா உலகெங்கும் உயிர்களை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது சானிடைசர்களை ஊசி மூலம் உடலுக்குள் நேரடியாக செலுத்திக்கொள்ளலாமே எனக்கேட்டு அதிர வைத்தவர். தொழிலதிபர், தொலைக்காட்சி பிரபலம் ஆகிய அடையாளங்களை கொண்டிருந்த ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்து ஆட்சி பீடத்திலும் கோலோச்சியவர். அரசியல் பின்புலமோ அல்லது ராணுவ பின்புலமோ இன்றி அமெரிக்க அரியணை ஏறிய முதல் நபர் ட்ரம்ப்தான்.

எடுத்ததெல்லாம் அதிரடி முடிவுகள் தான்!

trump, kim jong un
  • அமெரிக்கர்களை பாதுகாக்க குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார்.

  • பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற செய்தார்.

  • ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறினார்.

  • ஒரு பொத்தானை அழுத்தினால் அமெரிக்காவே அழிந்துவிடும் என எச்சரித்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்து, நட்பு பாராட்டி வரலாற்றை மாற்றி அமைத்தார். சீனாவுடன் வர்த்தக போரை தொடங்கி, உலக பொருளாதாரத்தையே ஆட்டுவித்தார்.

இதையும் படிக்க: ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் தேதி & இடம் அறிவிப்பு - 1,574 வீரர்கள் பங்கேற்பு!

வன்முறையில் முடிந்த கடந்த தேர்தல் தோல்வி! மீண்டும் சூடிய மகுடம்!

ஒருபுறம் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டிவிட்டு மறுபுறம் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைக்காக இந்தியாவை குறை கூறுவார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என கடந்த முறை இவர் கூறியதும் நாடாளுமன்றத்தில் இவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதையும் கண்டு அமெரிக்கா மட்டுமல்ல அகிலமே அதிர்ந்துதான் போனது. மீண்டும் ஒரு முறை மகுடம் சூடிவிட வேண்டுமென்பதற்காக தொடர்ச்சியாக காய் நகர்த்தி வந்தார் ட்ரம்ப்.

பரப்புரைகளில் ட்ரம்ப் 2 முறை கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். ஒரு முறை துப்பாக்கிக் குண்டு காதை கிழித்துக்கொண்டு சென்ற போதும் ரத்தம் கொட்டிய போதும் சற்றும் அஞ்சாமல் ’FIGHT FIGHT FIGHT’ என ஆவேசமாக முஷ்டியை மடக்கி குரல் எழுப்பியது அவரது மன உறுதியின் ஆழத்தை காட்டியது. ட்ரம்ப் மீது ஆயிரம் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற அழுத்தம்திருத்தமான கொள்கையே அந்நாட்டு அரசியலில் அவருக்கு வலுவான அடித்தளம் இட்டுத் தந்துள்ளது.

modi, trump

போர்களுக்கு விடை கொடுப்பாரா...உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பாதை அமைப்பாரா?

பல்வேறு குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டாலும் கமலாவுக்கு கடுமையான போட்டியை தந்தார் ட்ரம்ப் வரலாறு காணாத போட்டியில் கமலாவை வீழ்த்தி 2ஆவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறார் ட்ரம்ப். அமெரிக்க அதிபரின் முடிவுகள் அந்நாட்டு மக்களின் மட்டுமல்ல... உலகின் ஒவ்வொரு நாட்டின் குடிமகன் மீதும் மறைமுக தாக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் இந்தியர்கள் போன்ற வெளிநாட்டினராலும் கவனிக்கப்படுகிறது. போர்களுக்கு விடை கொடுப்பாரா...உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பாதை அமைப்பாரா என எதிர்பார்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

இதையும் படிக்க: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Afro -Asia தொடர்| பாகிஸ்தான் வீரர்களுடன் இணையும் இந்திய ஸ்டார்ஸ்!