வக்கார் உஸ் ஸமான் புதிய தலைமுறை
உலகம்

வங்கதேச ராணுவத்தின் தலைமைத் தளபதி வக்கார் உஸ் ஸமான் - யார் இவர்?

அதிரடியான அரசியல் மாற்றங்களால் வங்கதேசம் முழுவதுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நேரத்தில் வங்கதேச ராணுவத்தின் தலைமைத் தளபதி வக்கார் உஸ் ஸமான் குறித்தும், அந்நாட்டின் முந்தைய ராணுவத் தளபதிகள் குறித்தும் பார்க்கலாம்

PT WEB

வங்கதேசத்தில், ராணுவத் தலைமைத் தளபதியாக இருப்பவர் வக்கார் உஸ் ஸமான். ராணுவத்தின் உச்ச பதவியான இந்த இடத்திற்கு இவர் வந்ததே, கடந்த ஜூன் 23 ஆம் தேதிதான். அதற்கு முன்பு ராணுவத்தின் பொது ஊழியர்களின் தலைமைப் பொறுப்பிலும், அதற்கு முந்தைய 3 ஆண்டுகள் ஆயுதப்படைப் பிரிவின் முதன்மை அதிகாரியாகவும் இருந்துள்ளார் வக்கார் உஸ் ஸமான்.

ராணுவ நடவடிக்கைகள் வக்காருக்கு புதிதல்ல. 1966 ல் ஷெர்பூர் மாவட்டத்தில் பிறந்த வக்கார் உஸ் ஸமான், படித்ததே ராணுவப் படிப்புதான். இவரது தந்தை, வங்கதேச ராணுவத்தின் ஆயுதப்படை அதிகாரி என்பதால், அரிச்சுவடியே ராணுவப் பள்ளியில்தான் படித்துள்ளார். ராணுவக் கல்லூரியில் பாதுகாப்பு குறித்த பட்டம் பெற்ற வக்கார், இதே படிப்பில் லண்டனில் உள்ள கிங்'ஸ் பல்கலைக் கழகத்தில் உயர் படிப்பையும் முடித்துள்ளார்.

1997 ல் வங்கதேச ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முகம்மது முஸ்தாபிஜூர் ரகுமானின் மகள்தான், வக்கார் உஸ் ஸமானின் இல்லத்தரசி. இந்த வகையில்தான், வக்கார் உஸ் ஸமான், தப்பியோடிய ஷேக் ஹசீனாவுக்கு தூரத்து உறவினர் ஆகிறார்.

waker uz zaman

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய வகையில், இருவருக்கும் இடையிலான உறவு நல்லுறவாக இருந்ததாக சொல்கிறார்கள். 1985 ல் ராணுவக் கல்லூரியின் பேராசிரியராக பணியைத் தொடங்கிய வக்கார் உஸ் ஸமான், உளவுத்துறை, பிரதமர் அலுவலக பாதுகாப்பு உள்ளிட்ட ராணுவத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் பணியாற்றியுள்ளார்.

அமைதியை நிலைக்கச் செய்யும் பணிகளுக்கான வங்கதேசத்தின் பிரதிநிதியாக ஐ.நா. சபையில் பங்களித்திருக்கிறார் வக்கார். இப்போது வங்கதேசமே வக்கார் உஸ் ஸமானின் கட்டுப்பாட்டில் இருப்பது போல, அந்நாட்டின் அரசியலில் ராணுவத்தின் தலையீடு இருப்பது புதிதல்ல. 1977 முதல் வங்கதேசத்தின் அதிபராக இருந்த ஜியாவுர் ரகுமான், பதவியில் இருந்தபோதே, 1881 மே 30 ல் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது மனைவிதான் வங்கதேசத்தில் 2 முறை பிரதமராக இருந்த கலிதா ஜியா. அண்மைக்காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1975, 1982, 1990, 2001 ஆகிய காலகட்டங்களிலும் வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகம், ராணுவ நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளே புரட்சி வெடிக்கக் காரணமாக இருந்தது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்தது, அமீர் அப்துல்லா கான் நியாசி.