ட்ரம்ப், உஷா, ஜேடி வான்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

’இந்தியாவின் மருமகன்’ அமெரிக்காவின் அடுத்த துணை அதிபர்.. யார் இந்த ஜேடி வான்ஸ்?

அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கும் ஜேடி வான்ஸ், அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

Prakash J

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், மீண்டும் அரியணை ஏறியுள்ளார். துணை அதிபராக ஜேடி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இதையடுத்து, ஜேடி வான்ஸ் ’இந்தியாவின் மருமகன்’ என அழைக்கப்படுகிறார். ஜேடி வான்ஸுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இவரது மனைவி உஷா சிலுக்குரி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர், ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1970லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். ஜே டி வான்ஸும், உஷாவும் காதல் செய்து திருமணம் செய்துகொண்டனர். உஷாவும் ஜேடி வான்ஸும், கடந்த 2013ஆம் ஆண்டு யேல் சட்டப் பள்ளியில், ’வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி’ என்ற விவாதக் குழுவில் இருவரும் முதன்முதலில் சந்தித்தனர்.

பின்னர், 2014இல் கென்டக்கியில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியருக்கு இவான், விவேக் மற்றும் மிராபெல் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி வான்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். அவர் அமெரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத இரண்டாவது பெண்மணி ஆவார்.

உஷாவின் உறவினர்கள் ஆந்திராவில் உள்ள சாய்பாபா, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மற்றும் தேவி பாலா சீதா கோயில்கள் போன்ற உள்ளூர் கோயில்களுக்கு நில நன்கொடைகள் வழங்கியதற்காக இன்றளவும் மதிக்கப்படுகின்றனர். தற்போது அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கும் ஜேடி வான்ஸ், அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல்| தோல்வியைத் தழுவிய கமலா ஹாரிஸ்.. துயரத்தில் கண்ணீர் வடித்த ஆதரவாளர்கள்! #ViralVideo

முன்னதாக, ஜேடி வான்ஸுக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். அவர், “துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்தப் பொறுப்புக்கு சரியான தேர்வு. இனி, நான் இவரை ’துணை அதிபர் ஜே டி வான்ஸ்’ என அழைக்கலாம். அவரது மனைவி அழகான பெண்மணி உஷாவுக்கும் வாழ்த்து” எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஜேடி வான்ஸ், “நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன். அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் மறுபிரவேசத்தை நாங்கள் கண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மறுபிரவேசத்திற்குப் பிறகு, நாங்கள் மிகப்பெரிய பொருளாதார மறுசீரமைப்பை வழிநடத்தப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ”நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகம்..”- வெற்றிக்குப் பின் ட்ரம்ப்!