இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. எனினும், “ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில்கூட, ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதால் அவ்வமைப்புகளின் எதிர்காலம் என்ன ஆகும், போர் முடிவுக்கு வருமா என உலக அரசங்கில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே யாஹியா சின்வார் மரணத்திற்குப் பிறகு ஹமாஸின் அடுத்த தலைவராக யார் வரக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்தன. அந்த வகையில், காலித் மஷால், முஹம்மது சின்வார், முஹம்மது ஷபானா, கலீல் அல்-ஹய்யா, மௌசா அபு மர்சூக், முஹம்மது இஸ்மாயில் தர்விஷ் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக துணை பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷேக் நைம் காசிம், 1970இல் லெபனான் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து அவர், ஒரு செல்வாக்குமிக்க இஸ்லாமிய அறிஞரான அயதுல்லா முகமது ஹுசைன் ஃபட்லல்லாஹ்விடம் மத மற்றும் இறையியல் பாடங்களைப் படித்தார். 1974இல், அவர் இஸ்லாமிய மதக் கல்விக்கான சங்கத் தலைவரானார். 1988 வரை அவர், லெபனான் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தையும் இணைந்து நிறுவினார். ஹிஸ்புல்லாவின் ஆரம்பகால உறுப்பினர்களில் அவரும் ஒருவர். அந்த அமைப்பு உருவாவதற்கு ஒரு கருவியாகவும் விளங்கினார். அதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டில், அப்பாஸ் அல்-மௌசாவ்யின் படுகொலைக்குப் பிறகு, காசிம் ஹெஸ்பொல்லாவின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ஹிஸ்புல்லாவின் ஷூரா கவுன்சிலில் ஒரு முக்கிய பதவியை ஏற்றுக்கொண்டார். அவர், தற்போது நிர்வாக அமைப்பில் அரசாங்க மற்றும் துணை இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார். அப்பாஸ் அல்-மௌசாவ், சுபி அல்-துஃபைலி, முகமது யாஸ்பெக், இப்ராஹிம் அமீன் அல்-சயீத் மற்றும் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா போன்றவர்களின் ஷியா அறிஞர்களின் வலையமைப்பில் காசிமின் ஈடுபாடு லெபனான் அமைப்பிற்குள் அவரது பாதையை வடிவமைத்தது. 71 வயதான காசிம், பெரும்பாலும் ஹிஸ்புல்லாவின் நம்பர் 2 என அழைக்கப்படுகிறார். அவரது தலைமைப் பொறுப்பைத் தவிர, எழுத்தாற்றல் பெற்றவராகவும் அவர் அறியப்படுகிறார். பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் அவர், ஹிஸ்புல்லாவின் அடித்தளம் மற்றும் சித்தாந்தத்தை விவரிக்கும் "Hizbullah: The Story from Within" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபு, ஆங்கிலம் மற்றும் ஃபார்ஸி உட்பட ஆறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அதன் சர்வதேச வரம்பை பிரதிபலிக்கிறது.