உலகம்

கிம் ஜாங் உன் யார்? பதவிக்கு வந்தது எப்படி?

கிம் ஜாங் உன் யார்? பதவிக்கு வந்தது எப்படி?

webteam

இன்றைய உலகில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சியாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் கிம் ஜாங் உன். ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்காவுக்கு ஒரு வகையில் சவாலாக இருக்கிறார் என்றால், மற்றொரு‌ முறையில் சவால் கொடுப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

கிம் ஜாங் உன் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த ஏழு ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும். அவர் விரும்பினால் அண்டை நாடுகளுடன் உறவை முறித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உறவை புதுப்பித்துக் கொள்ளலாம். வடகொரியாவை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் கிம் பரம்பரையின் வாரிசு அவர். உலகில் மிகக் குறைந்த வயதில் அதிகாரங்களைப் பெற்ற தலைவர்களில் இவர் முக்கியமானவர். வலிமையான தலைவர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங், கிம் ஜாங் உன்னின் தாத்தா.

கிம்மின் இளைமைக் காலம்

கிம் ஜாங் உன்னின் இளமைக் காலம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் 1982-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அவர் பிறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால் தென்கொரியாவின் உளவுத்துறையினர் அவர் 1983-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். வடகொரியாவின் தலைவர்கள் பொதுவாக தங்களது குழந்தைகளை வெளிநாடுகளில் ரகசியமாக வளர்ப்பது வழக்கம். அதுவும் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு நாடுகளில் பிரித்து வளர்க்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் பிறந்த சில ஆண்டுகளிலேயே சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகருக்கு அனுப்பப்பட்டார் கிம் ஜாங் உன். அங்கு தொடக்கக் கல்வி பயின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு சோல் பாக் பாக் சோல் என பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசு என்பதால் அடையாளம் தெரியாத வகையிலேயே அவர் வளர்க்கப்பட்டார். பாதுகாப்புக்காக உடன்படிக்கும் மாணவர் என்ற பெயரில் ஒரு பாதுகாவலரும் அவருடன் தங்கியிருந்தார். பெர்னில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மகன் என்ற பெயரிலேயே கிம் ஜாங் உன் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டார். இப்போது கடும் சினம் கொண்டவராக அறியப்படும் கிம் ஜாங் உன் இளமைக் காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். கூடைப் பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜாங் உன், மைக்கேல் ஜோர்டானின் தீவிரமான ரசிகர்.

2010-ஆம் ஆண்டில்தான் கிம் ஜாங் உன்னைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிம் ஜாங் இல்லுக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்யப் போகிறவர் என்றும் அடையாளப்படுத்தப்பாட்டார். 2011-ஆம் ஆண்டில் கிம் ஜாங் இல் இறந்த நாளிலேயே சுப்ரீம் லீடர் என்ற பெயரில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக் கொண்டார் கிம் ஜாங் உன். அன்றைய நாள் முதல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்தையின் வழியில் அடுத்தடுத்து அணு ஆயுதச் சோதனைகளைச் செய்தார். தேவைப்படும்போதெல்லாம் புதிய வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தினார். விண்வெளிக்குச் செல்லும் அளவுக்கு திறன் மிக்க ராக்கெட்டுகள் இவரது காலத்திலேயே உருவாக்கப்பட்டன.

அதே நேரத்தில் தனக்கு எதிரானவர்கள் என்ற தெரிந்தவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் மேற்கொண்டு வந்தார். அவர்களில் ஒருவர் ஜாங் சுங்-தயீக். கிம் ஜாங் உன்னின் மாமா. கிம் ஜாங் உன் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்தவர். பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும், கட்சியைப் பிளவுபடுத்த முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 5 நாள்கள் கழித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக பல தகவல்கள் உலா வருகின்றன. தயீக்கை ஒரு அறையில் அடைத்து, வேட்டை நாய்களைக் கொண்டு கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபர் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியதாகக் கண்டறியப்பட்டது. வடகொரிய அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஒன்றரை லட்சம்பேர் கூடியிருக்க அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பொது இடத்தில் இதுபோன்று தண்டனைகள் நிறைவேற்றப்படுவது, வட கொரியாவில் சர்வசாதாரணம். மரணதண்டனைகள் சாதாரணத் துப்பாக்கிகள் கொண்டு நிறைவேற்றப்படுவதில்லை. போர்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்களை இதற்காகவே வடகொரிய அதிகாரிகள் வைத்திருக்கிறார்கள்.

மனித உரிமை என்பதற்கு அதிபராகப் பார்த்து அளிக்கும் சலுகை என்பதுதான் கிம் ஜாங் உன் உள்பட வடகொரிய ஆட்சியாளர்களின் அகராதியில் பொருள். சிறைகள், வதை முகாம்கள், கொலைக்களங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் இந்தப் பொருள் புதைந்திருக்கிறது. சிறையை விட்டுத் தப்பிக்க நினைத்தவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் கொல்லப்படுவார்கள். அதற்கு இன்னொரு ஆதாரம். அது கிம் ஜாங் நம்மின் கொடூரமான கொலை. இவர் கிம் ஜாங் உன்னின் சகோதரர். தந்தை கிம் ஜாங் இல்லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இவர்தான் வடகொரியாவின் அதிபராவார் என்று நினைத்திருந்தபோதுதான் அந்த இடம் கிம் ஜாங் உன்னுக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தார் கிம் ஜாங் நம். தகவல் அளிக்கும் இயந்திரத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவர் அருகே வந்து அவரது முகத்தில் ஒரு திரவத்தைப் பீய்ச்சி அடித்தார். மற்றொரு பெண் அவரது முகத்தில் ஈரமான ஒரு துணியை வைத்து மூடினார். பதறிப்போன கிம் ஜாங் நம், அருகேயிருந்த காவல்துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார். என்ன நடந்தது என அவர்களிடம் விளக்கினார். சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் வந்தது. அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. ஏனென்றால் அவர் முகத்தில் தெளிக்கப்பட்டது வி.எக்ஸ். எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும் கொடிய ரசாயனம். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இந்த ரசாயனம், தோல்வழியாக உடலுக்குள் ஊடுருவி சில நிமிடங்களில் உயிரைப் பறித்துவிடும். இதனைத் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் போர்க்குற்றத்துக்கு ஒப்பாகும். இத்தகைய கொடிய ரசாயனம் சாதாரணமாக யாருக்கும் கிடைக்காது. தற்போதிருக்கும் ஆதாரங்களின்படி பார்த்தால், 4 வடகொரிய உளவாளிகள், இரு பெண்களைப் பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்போது கிம் ஜாங் உன்னின் அரசியல் பிம்பம் சற்று மாறியிருக்கிறது. ட்ரம்புடன் சொற்போர் நடத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடன் நேசக் கரம் நீட்டுகிறார். சீனாவின் அதிபர் ஸீ ஜின்பிங்கையும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவையும் சந்தித்து உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இப்போது அமெரிக்க அதிபருடனான சிங்கப்பூர் சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பு கிம் ஜாங் உன்னுக்கு புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.