சூசி வைல்ஸ், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

மேடையில் பேசத் தயங்கியவர்| வெள்ளைமாளிகையில் ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய பதவி.. யார் இந்த சூசி வைல்ஸ்?

டொனால்டு ட்ரம்ப், தனது பிரசார மேலாளரான சுசி வைல்ஸை, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.

Prakash J

வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி

அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். விரைவில் பதவியேற்கவும் உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம், அவரைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன. தவிர, அவருடைய ஆட்சி பற்றிய பேச்சுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அதிபராக உள்ள ட்ரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் டொனால்டு ட்ரம்ப், தனது பிரசார மேலாளரான சுசி வைல்ஸை, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இது உலக அளவில் கவனம் பெற்றிருப்பதுடன், இந்த விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. காரணம், அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி பதவியை வகிக்கும் முதல் பெண்மணி சூசி வைல்ஸ் ஆவார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இதன் காரணமாகவே, அந்தப் பணிக்கு சூசி வைல்ஸை ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இதையும் படிக்க: IND Vs SA | ஒரே போட்டி.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. பல சாதனைகள் முறியடிப்பு!

இதுகுறித்து அவர் முன்னர் தெரிவிக்கையில், ”சூசி புத்திசாலி. புதுமை விரும்பி. கடின உழைப்பாளி. உலகளவில் நன்கு மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார், அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

யார் இந்த சூசி வைல்ஸ்?

புளோரிடாவில் வசித்து வரும் சூசி வைல்ஸ், அமெரிக்க அரசியல் ஆலோசகராக பல்வேறு பணிகளை கவனித்து வந்தார். அமெரிக்க அரசியல் ஆலோசகராக கடந்த 1979-இல் தனது பணியை தொடங்கிய சூசி, 1980-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகன் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார். கடந்த 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டபோது புளோரிடாவில் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகங்களை அமைத்தார்.

தொடர்ந்து 2020 தேர்தலிலும் அந்த பணியை செய்திருந்தார். சுசி வைல்ஸ், டொனால்டு ட்ரம்பின் வட்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவலாக அறியப்படுகிறார். பலராலும் சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறார். டொனால்டு ட்ரம்பின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, மேடையில் பேசுவதற்கு ட்ரம்ப் அழைத்தும் பேச மறுத்துவிட்டார். ட்ரம்ப் குடும்பத்தினருடன் சூசி, வலுவான உறவை வளர்த்துக் கொண்டார். மேலும் ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியர் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருடன் ட்ரம்ப் இணைந்து இருப்பதற்காக தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தார். அவர்களை ஓர் இணைப்பில் நிலைநிறுத்திக் கொள்ள வழிவகை செய்தார்.

இதையும் படிக்க: INDvsSA: திடீரென நின்ற இந்திய தேசிய கீதம்.. உடனடியாக வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! #ViralVideo