Sachin, Seema Haider PTI
உலகம்

சிக்கலில் ’சீமா காதல்’.. யார் இவர்? பாக். உளவாளி என கிளம்பும் புகார்.. 2 நாட்களாக மிஸ்ஸிங் ஆன ஜோடி!

பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் பற்றிய விவகாரம் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் சீமா ஹைதர் குறித்து முழு விவரங்களை அறிவோம்.

Prakash J

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற இளம்பெண், உத்தரப் பிரதேச இளைஞரான சச்சினுடன் ஆன்லைன் விளையாட்டின்போது பழக்கம் ஏற்பட்டு, அவர் மீது காதலில் விழுந்தார். பின்னர் காதலனைத் தேடி, தன் குழந்தைகளுடன் நாடுவிட்டு இந்தியா வந்தடைந்தார். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து காதலர் சச்சினுடன் வசித்துவந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, "நான் சச்சினை காதலிக்கிறேன். எனக்கு பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை. சவுதியில் இருக்கும் என் கணவருடன் இணைந்து வாழ விருப்பமுமில்லை. இந்தியாவிலேயே தங்களைச் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்" என்று சீமா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Sachin, Seema Haider

இதையடுத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சீமா, சச்சினுடன் இணைந்து வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ’சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால் 26/11 மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த நேரிடும்’ என மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சீமா ஹைதரை உடனடியாக நாடு கடத்தாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என வலதுசாரி அமைப்பான கவுரக்‌ஷா இந்து தளம் எச்சரித்துள்ளது. இதற்காக, அந்த அமைப்பு 72 மணி நேரக் கெடுவும் விதித்துள்ளது. சீமா ஹைதர் பாகிஸ்தான் உளவாளியாகவும், நாட்டுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

Sachin, Seema Haider

இதற்கிடையே, நொய்டாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீமா ஹைதரும் காதலர் சச்சினையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ஜோடி காணப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து சீமா ஹைதரின் பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் சீமாவின் முழு விவரம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சில ஊடகங்களின் தகவல்படி, சீமா பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குலிஸ்தான்-இ-ஜௌஹரில் வசித்து வந்ததாகவும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி குலாம் ஹைதரை திருமணம் செய்துள்ளார் எனவும், தற்போது குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறார் எனவும் தெரிவித்துள்ளன.

மேலும், சச்சினும் சீமாவும் கடந்த 2020ஆம் ஆண்டு முதலே ஆன்லைன் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் தொலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டதற்கு பின் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 2021இல் இருவரும் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, சீமாவும் சச்சினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் நேபாளத்தில் சந்தித்துள்ளனர். அங்கு அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்குப் பிறகு சச்சின் இந்தியா திரும்பிய பிறகு சீமா பாகிஸ்தான் சென்று அங்கிருந்தபடி தன் கணவரிடம் சண்டையிட்டுள்ளார். அதன்பிறகே, தாம் தங்கியிருந்த வீட்டை 12 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, இந்தியாவுக்கு தன் குழந்தைகளுடன் பயணமாகியுள்ளார்” என ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Seema Haider, Sachin

சீமா விவகாரம் உலகளவில் விவாதப் பொருளான நிலையில், குலாம் ஹைதர், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், சீமா ஹைதர் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டு, காதலர் சச்சினை ‘பாபா’ எனத் தொடங்கியிருப்பதாகவும், அவருடைய 4 குழந்தைகளின் பெயர்களை மாற்றி இருப்பதாகவும், சச்சினின் பெற்றோரும் தன்னை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து சச்சினுடனே வாழப் போகிறேன்” எனவும் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் சீமாவுக்கு இந்து அமைப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ’சீமா ஹைதர் ஓர் உளவாளி; அவரை உடனே நாடு கடத்த வேண்டும்’ எனத் தெரிவித்தன.

சீமா

இதற்குப் பதிலளித்த சீமா, ”என்னை உளவாளி என்று எல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை எல்லாம் இல்லை. உண்மை எப்படியும் அனைவருக்கும் கொஞ்ச காலத்தில் தெரிய வரும். அப்படியே நான் உளவாளியாக இருந்திருந்தால் நான் தனியாகவே இந்தியாவுக்கு வந்திருப்பேன். எனது குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சீமா இந்து மதத்திற்கு மாறியிருப்பதால், பாகிஸ்தானில் அவருக்கு எதிராகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீமா மீண்டும் பாகிஸ்தான் வந்தால், கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், “பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த மத சமூக விதிமுறைகளை சீமா மீறிவிட்டார். இங்கே அவர் மீண்டும் வந்தால் கடுமையான தண்டனை நிச்சயம். ஆனால், குழந்தைகளை மட்டும் திருப்பி அனுப்ப வேண்டும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சீமா ஹைதர், டான்ஸ் ஆடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவை, எப்போது பதிவு செய்யப்பட்டது என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், சீமா பற்றிய செய்திகள் விவாதப் பொருளாக ஆனதையடுத்து அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.