அர்ஜென்டினாவில், கடந்த நவ. 19ஆம் தேதி, நடைபெற்ற அதிபர் தேர்தலில், மக்களின் நம்பிக்கையை வென்ற தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் மிலே, 55.7 சதவிகிதம் வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடப்பு நிதியமைச்சர் செர்கியோ மாசா, 44.3 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார்.
முன்னதாக, கடந்த மாதம் இறுதியில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மாசா 36 சதவீத வாக்குகளை பெற்றநிலையில், ஜேவியர் 30 சதவீத வாக்குகளை பெற்றார். பெரும்பான்மை நிரூபிக்கப்படாத நிலையில் 2ஆம்கட்ட தேர்தலில் மிலே வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து, அடுத்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி பதவி ஏற்க உள்ள ஜேவியர் மிலேவிற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அர்ஜென்டினாவின் அரசியல் தலைவர்கள் வரலாற்றுரீதியாகவே பொருளாதாரத்தைச் சரிசெய்ய முயன்று தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆம், அந்தவகையில், அர்ஜென்டினாவின் பொருளாதாரம் இன்று, மிகமோசமான நிலையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், உலகின் மிக அதிக பணவீக்க விகிதங்களில் ஒன்றாக அர்ஜென்டினாவின் வருடாந்திர பொருளாதாரம் 140 சதவீதத்தை தாண்டியிருக்கிறது; மக்கள் தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வறுமையில் இருக்கிறார்கள்; நாட்டின் நாணயமான பெசோ வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த வகையில், அர்ஜென்டினாவின் தற்போதைய அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸ் பொருளாதாரத்தைச் சரிபடுத்த முடியாமால் தோல்வி காண, அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. இந்தச் சூழலில், அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில்தான் பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலேவுக்கு மக்கள் ஆதரவளித்து அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவருடைய தேர்வுக்கு முக்கியக் காரணம், தேர்தலுக்கு முன்பு அவர் அளித்த நம்பிக்கை வாக்குறுதிகள்தான்.
’அர்ஜென்டினாவை டாலர் தேசமாக மாற்றுவேன்’ என்று உறுதி அளித்த அவர், அதற்காக நாட்டின் மத்திய வங்கி மூடப்படும் எனவும் அறிவித்தார்.
’அரசின் செலவினங்களுக்கு கடிவாளம் போடப்படும்’ என்றும் தெரிவித்தார்.
’பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவேன், துப்பாக்கி பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்துவேன்’ என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர், ‘ஊழலை வேரறுப்பேன்; மனித உறுப்புகளை விற்பதை சட்டப்பூர்வமாக்குவேன்; கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவேன்’ என நூதன அறிவிப்புகளையும் முன்மொழிந்தார். பருவநிலை மாற்றம் , பாலியல் கல்வி ஆகியவை ஏமாற்று வேலை என்றும் ஜேவியர் விமர்சித்தார். இப்படியான வாக்குறுதிகளே அவரை, உயர்ந்த பதவிக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஜேவியரின் வெற்றி, அர்ஜென்டினா 1983ஆம் ஆண்டு ஜனநாயக நாடாக மாறிய பிறகு, நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறிய மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
ஜேவியருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ’இந்தியா-அர்ஜென்டினா உறவை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜேவியர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பேசி வந்தார். அப்போது, நாட்டின் நிதி பற்றி கடுமையாக விமர்சித்தார். மேலும் பொதுமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தத் தவறியதற்காக அரசியல்வாதிகளையும் அரசையும் கண்டித்தார். 2021ஆம் ஆண்டில், கட்சி ஆரம்பித்து அதில் போட்டியிட்டும் வெற்றிபெற்றார். நடப்பு ஆகஸ்ட் மாதம் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளராகப் பேசப்பட்டார். அவர் 30.5 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
அதிபர் தேர்தல் பதவிக்கு முன்னதாக, ஜேவியர் தனது பொருளாதார மற்றும் முதலாளித்துவ கருத்துகளால் உலகம் முழுவதும் பேசுபொருளானார். ஜேவியர், தனது இளமைப் பருவத்தில், ஒரு கால்பந்து வீரராக விளங்கினார். அவர் சாகரிட்டா கால்பந்து கிளப்பின் இளைஞர் பிரிவில் கோல்கீப்பராக இருந்தார். மேலும் அவர் ஓர் இசை ஆர்வலராகவும் இருந்தார். இசைக் குழுக்களில் இணைந்து பாடவும் செய்தார். ஒரு பொருளாதார நிபுணராக, இவர் பெரும்பாலான விமான நிலையங்களை நிர்வகிக்கும் நாட்டின் முன்னணி வணிகக் குழுக்களில் ஒன்றான Corporación அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினார்.
இதையும் படிக்க: உ.பி.: “பாலியல் வழக்கைத் திரும்பப் பெறு” - மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!