Hamas leader Ismail Haniyeh ட்விட்டர்
உலகம்

கொல்லப்பட்டார் ஹமாஸ் தலைவர்.. யார் இந்த இஸ்மாயில் ஹனியா? அமைதித் தூதரா.. உலகளாவிய பயங்கரவாதியா?

ET desk

ஈரானிய அரசு ஊடகங்களும், ஹமாஸ் அமைப்பும் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஹனியே தன் வீட்டிற்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. காஸாவில் நாள்தோறும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர தாக்குதலால் பெரும் பீதியில் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு, மேலும் ஒரு பேரிடியாய் இறங்கியிருக்கிறது இஸ்மாயில் ஹனியேவின் மரணம்.

யார் இந்த இஸ்மாயில் ஹனியே, இனி ஹமாஸ் என்ன ஆகும்..?

இஸ்மாயில் ஹனியே பல தசாப்தங்களாக ஹமாஸின் ஒரு பகுதியாக இருந்து வந்தவர். நாடு கடத்தப்பட்ட நிலையில், ஈரானிலிருந்து ஹமாஸின் செயல்பாடுகளை கவனித்துவந்தார். அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர், இஸ்மாயில் ஹனியேதான் இஸ்ரேலின் MOST WANTED MAN. இந்த தாக்குதலுக்கு முன்பும் சரி, அதற்கடுத்தும் சரி... இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தையில் இஸ்மாயில்தான் ஈடுபட்டு வந்தார்.

ஹனியே காசா நகருக்கு அருகிலுள்ள ஒரு அகதிகள் முகாமில் பிறந்தார். 1980களின் பிற்பகுதியில் முதல் எழுச்சியின் போது ஹமாஸில் இணைந்தார். ஹமாஸ் என்கிற குழு ஒரு அமைப்பாக மாறியதும் அப்போதுதான். இஸ்ரேலின் அடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் இஸ்ரேல் அரசால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடு கடத்தப்பட்டு காசாவுக்குத் திரும்பினார். காஸாவில் இருந்தபோதுதான் ஹமாஸ் அமைப்பில் படிப்படியாக முன்னேறினார்.

இதையும் படிக்க: ‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!

2004ஆம் ஆண்டில், ஹமாஸின் மூத்த தலைவர்களான ஷேக் அஹமது யாசின் மற்றும் அப்தெல் அசிஸ் ரன்டிசி ஆகியோர் இஸ்ரேலில் வைத்து இரண்டு வார இடைவெளியில் கொல்லப்பட்டனர். அப்போது ரகசியமாக ஒரு குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார் ஹனியே. 2017ஆம் ஆண்டு அவர் அந்தக் குழுவின் அரசியல் தலைவரானார், மேலும் அமெரிக்காவால் "உலகளாவிய பயங்கரவாதி" என்று பெயரிடப்பட்டார்.

டிரம்ப் இஸ்ரேலில் தலைநகரமாக ஜெருசேலத்தை அறிவிப்பதற்கும், பாலஸ்தீன ~ அமெரிக்கா இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கவும் இது ஒரு காரணமாக அமைந்தது. ஹமாஸ் அமைப்பின் மற்ற தலைவர்களைப் போல் அல்லாமல், ஹனியே உலகம் முழுவதும் பயணித்தார், அமைப்பின் அரசியல் தலைவராக உலகத் தலைவர்களைச் சந்தித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை கூட தெஹ்ரானில் ஈரான் அதிபர் மசூத் பேசேஷ்கியனுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு பேச்சுவார்த்தைகள்:

அக்டோபர் 7 அன்று ஹமாஸின் எதிர்பாராத தாக்குதலில் குறைந்தது 1,500 ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையைக் கடந்து உள்நுழைந்தனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 200 பேர் பிணைக் கைதிகளாகக் கடத்தப்பட்டனர். அதன் பின்னர், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் 39,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் .

அதன் பிறகு கடந்த மாதங்களில், காசாவில் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது உட்பட, இந்த மோதல் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஹனியே ஒரு முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேறினால் ஒப்பந்தம் செய்ய அவர் விருப்பம் காட்டினார் - மே மாதம், மத்தியஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்ய குழு "இன்னும் ஆர்வமாக" இருப்பதாகக் கூறினார், ஆனால் எந்தவொரு முன்மொழிவுக்கு முன்னராகவும் அந்த நிலப்பரப்பில் போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!

ஜூலை மாத தொடக்கத்தில் கூட, ஹனியே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளை விவாதிக்க கத்தார் மற்றும் எகிப்தில் உள்ள மத்தியஸ்தர்களுடன் தொடர்பில் இருந்தார். இது இரு தரப்பினரும் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விளிம்பில் இருக்கக்கூடும் என்ற சில நம்பிக்கையை ஏற்படுத்தியது. போர் முழுவதும், அவர் மற்ற உலகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதைத் தொடர்ந்தார் - இதில் சீன தூதர் வாங் கேஜியனும் அடங்குவார். அவர் மார்ச் மாதம் கத்தாரில் ஹனியேவைச் சந்தித்தார், அப்போது அவர்கள் காசாவில் நடந்த போரைப் பற்றி விவாதித்தனர்.

இந்தப் போரில் ஹனியே தன் குடும்பத்தையும் தியாகம் செய்திருக்கிறார். ஏப்ரல் மாதம், இயக்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டதாகக் கூறி இஸ்ரேலிய காவல்துறை அவரது சகோதரிகளில் ஒருவரைக் கைது செய்தது. ஒன்பது நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் அவரது மூன்று மகன்களும் நான்கு பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இருந்தபோதிலும் அதன் பிறகும்கூட, “இம்மரணங்கள் போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது” என ஹனியே வலியுறுத்தினார்.

"பேச்சுவார்த்தைகளின் போதும், ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பும் எனது குழந்தைகளை இலக்கு வைப்பதன் மூலம் ஹமாஸை தனது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள், மாயையில் இருக்கின்றானர்" என்று அவர் கூறினார்.

ஹனியேவின் மரணத்தின் மூலம் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துப்போவதில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

இதையும் படிக்க: “குட்டி தேவதையுடன் மோதினேன்..” - தோல்விக்குபிறகு கண்ணீருடன் கர்ப்பத்தை அறிவித்த வாள்வீச்சு வீராங்கனை