சிரியா நாட்டில் துருக்கியின் ராணுவப் படையால் ஏராளமான குர்துக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தில் கொடூர தாக்குதல்களை நடத்தி அரக்கன் போல செயல்படுவதாக கூறப்படும் துருக்கியையும், படைகளை திரும்பபெற்று முதுகில் குத்தியதாக கூறப்படும் அமெரிக்காவின் செயலையும் கவனித்து பார்க்க வேண்டும்.
சிரியாவில் துன்பச் சம்பவம் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடம் கூட அங்கு உள்நாட்டு போரில் ஏரளமானோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கவுட்டா பகுதியில் அரசுப் படையின் தாக்குதல் தீவிரமடைந்தது. இதனால் நச்சு வேதிப் பொருள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஒரே வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக குழந்தைகள் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
சிரியாவின் கவுட்டா நகரில் அரசுப் படைகளும், ரஷ்யாவும் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்தன. ஏவுகணைகள், வானில் இருந்து வீசப்பட்ட குண்டுகள், ஹெலிகாப்டர்களில் இருந்து எறியப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட பீப்பாய்கள் போன்றவையெல்லாம் குழந்தைகளை இரக்கமின்றி கொன்று குவித்தன. ஒரு சில நாட்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றனர். பலர் பெற்றோர்களை இழந்து இன்னும் அனாதைகளாக நிற்கின்றனர். இந்த புகைப்படங்கள் கடந்த வருடம் உலகம் முழுவதும் பகிரப்பட்டு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் சிரியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த முறை சிரியாவில் வாழும் குர்து இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஈரான், ஈராக், சிரியா, துருக்கி எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்ற ஒரு இனம் தான் குர்து மக்கள். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ‘குர்திஸ்தான்’ என்ற தேசத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளது. இதற்காக சிரியாவின் வடக்குப் பகுதியில் வாழும் குர்து இன மக்களில் ஒரு பகுதியினர் ‘குர்து ஆயுதப் படை’ என்ற அமைப்பின் பெயரில் போராடி வருகின்றனர். அதேசமயம் குர்துப் படையினரால் தங்கள் எல்லைப்பகுதிகளுக்கு ஆபத்து என கோபத்தில் இருக்கும் துருக்கி அரசு, அவர்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளது.
இத்தனை நாட்கள் அமெரிக்க படையின் ஆதரவில் குர்துப் படைகள் இருந்தன. ஏனென்றால் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவுடன் குர்துப் படைகள் கைகோர்த்து சண்டையிட்டு வந்தன. அமெரிக்க படைகளின் ஆதரவால் குர்து படைகளும் துணிந்து சண்டையிட்டன. இதனால் துருக்கி ராணுவத்தினாலும் குர்து படைகளை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் தங்களுக்கு உதவிய குர்துப் படைகளை முதுகில் குத்தும் விதமாக அமெரிக்க படைகளை அதிபர் ட்ரெம்ட் திரும்பப் பெற்றுவிட்டார். இதனால் துருக்கிப் படைகள் சிரியாவிற்குள் நுழைந்து, குர்துக்களை தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் என்ன கொடுமை என்றால், தாக்குதல் நடத்தும் துருக்கி ராணுவத்தினரின் இலக்கு, குர்து படைகள் மீது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குர்து இன மக்களின் மீது மரணமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான குர்து மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான குர்து மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். தங்கள் இன மக்களை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி சிரியா ராணுவத்துடன் குர்து படைகள் கைகோர்த்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது. ஏரளமான மக்கள் கொலை செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவும் குரல் கொடுத்திருக்கிறது. இதற்கிடையே தன் மீது விழுந்துள்ள பலியை போக்கிக்கொள்ளும் வகையில் துருக்கி மீது பொருளாதாரத்தடை விதிப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி, போராட்டங்கள், உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை, நோய்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு என எத்தனையோ குறைகளுடன் உலகத்தில் மக்கள் வசித்தாலும், வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டப்படுவதும், கண் முன்னே குடும்பத்தினர் இறந்துபோவதும் பெருங்கொடுமைகளுள் ஒன்றாகும். இந்தக் கொடுமை சிரியாவில் என்று தான் ஓயுமோ என்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. குர்து இன மக்கள் மீது மட்டுமல்ல உலகில் உள்ள மற்ற எந்த இனத்தின் மீதும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறக்கூடாது என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது.