உலகம்

உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு தடை விதித்திருக்கும் அமைப்புகள் என்னென்ன?

உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு தடை விதித்திருக்கும் அமைப்புகள் என்னென்ன?

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலக அளவில் எந்தெந்த முக்கிய நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள், ரஷ்யாவுடனான தொடர்பை நிறுத்தியுள்ளது என்பது குறித்து இங்கு காணலாம்.

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான யூடியூப், தனது நிறுவனத்தில அனைத்து ரஷ்ய சேனல்களுக்கான வர்த்தக ரீதியிலான விளம்பரங்களை ஒளிபரப்பி பணம் ஈட்டுவதற்கான முறையை நிறுத்தியுள்ளது. அதேபோல, ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் நிறுவனங்கள ரஷ்யாவின் வீடியோக்களை தங்கள் தளத்தில் நிறுத்தி வைத்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, தனது திரைப்படங்களை ரஷ்யாவில் வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல, வார்னர் பிரதர்ஸ், சோனி பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது திரைப்படங்களை ரஷ்யாவில் வெளியிடுவதை நிறுத்திவிட்டன. நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ரஷ்ய ஆதரவு 20 சேனல்கள் ஒளிபரப்புகளை தங்களது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ரஷ்யாவின் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.


உலகின் பிரபலமான 'போயிங்' விமான நிறுவனம், ரஷ்யாவின் விமான நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை விநியோகிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா பிரிட்டன் கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷ்யா உடனான விமானப் போக்குவரத்தை முழுமையாக துண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள், தனது விற்பனையை ரஷ்யா முழுவதும் நிறுத்தி வைத்திருக்கிறது. உலக அளவில் பிரபலமான ஹார்லி டேவிட்சன் மோட்டார் நிறுவனம், ரஷ்ய நாட்டிற்கான தங்களது ஏற்றுமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது.

'போர்ட் ஜெனரல் மோட்டார்ஸ்', 'ரெனால்ட்', 'ஜாகுவார்', 'பிஎம்டபிள்யூ' உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதேபோல, 'அடிடாஸ்' நிறுவனம் ரஷ்ய கால்பந்து போட்டிகளுக்கான தங்களது ஒப்பந்தங்களை நிறுத்திக் கொண்டுள்ளது. 'நைக்' நிறுவனத்தை பொறுத்தவரை, இணையதள வாயிலான விநியோகத்தை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

விளையாட்டுத் துறையை பொருத்தவரை, 'பிபா' கால்பந்து நிறுவனம், 'யு இ எப் ஏ' நிறுவனம் ஆகியவை கால்பந்து விளையாட்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே, சர்வதேச ஜூடோ சம்மேளனத்தில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதுடன், அந்த அமைப்பின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நீக்கப்பட்டார்.


அதே போல, பிரபல பார்முலா 1 பந்தயம் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது. கார் பந்தய சாம்பியன் களான செபாஸ்டியன் வெட்டல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ரஷ்யாவில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். சர்வதேச ரக்பி விளையாட்டு அமைப்பும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை தடை செய்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை முழுமையாக தடை செய்வதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.