sunitha williams PT
உலகம்

சுனிதா வில்லியம்ஸ் எப்போது வருவார்? காத்திருக்கும் உலகம்.. மீண்டும் சிக்கல்! நாசா கொடுத்த விளக்கம்

"தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி இன்னமும் நிறைவுபெறவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் முடிந்து இருவரும் பூமிக்கு திரும்ப வர.."

யுவபுருஷ்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் கடந்த மாதம் 13ஆம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, 26ம் அவர்கள் பயணித்த ஸ்டார்லைன் போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சரியாக 7 நாட்களுக்கு விண்வெளி மையத்தில் தங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டம், 50வது நாளை எட்டியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் பூமி திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. விண்கலத்தில் லேசாக ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதன் விளைவே இதற்கு காரணம் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருக்கும் Starliner விண்கலத்தில் Thruster failures மற்றும் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்த நாசா குழு, ‘வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. சில பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.

Starliner மாதிரி விண்கலத்தை பூமியில் வைத்து சோதனை செய்து, அதில் ஏற்படும் கோளாறுகளை கண்டறிய வேண்டும். கோளாறின் வகை அதனை சரி செய்யும் முறைகள் என்று இந்த தரவுகளைக் கொண்டு விண்வெளியில் இருக்கும் Starliner ஐ சரிசெய்யலாம். வரும் நாட்களில் இந்த சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி இன்னமும் நிறைவுபெறவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் முடிந்து இருவரும் பூமிக்கு திரும்ப வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக தங்களின் நிலை குறித்து பேசியிருந்த சுனிதா, ‘இந்த விண்கலம் எங்களை பூமிக்கு கொண்டு சேர்க்கும் என்பதை நான் நம்புகிறேன். எந்த பிரச்னையும் இல்லை என்ற நல்ல உணர்வு என் இதயத்தில் இருக்கிறது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.