முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றத்தில் இருக்கிறது கொரிய தீபகற்பம். வடகொரியா அதன் ஏவுகணைப் பரிசோதனையைத் தீவிரப்படுத்தியதுதான் இந்தப் பதற்றத்துக்குக் காரணம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா ஏவிப் பரிசோதித்திருக்கிறது. இது 2017-ம் ஆண்டு ஏவப்பட்ட ஒட்டுமொத்த ஏவுகணைகளின் எண்ணிக்கையை விடவும் அதிகம். நேற்று ஏவப்பட்ட ஒரு ஏவுகணை முதல் முறையாகத் தென் கொரியாவின் கடல் எல்லைக்குள் சென்று விழுந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனையின் காரணமாக அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் அரசுகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
கிம் ஜாங் -கின் திடீர் கோபத்துக்கு அமெரிக்கா- தென் கொரியா போர்ப்பயிற்சி காரணமா?
தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தற்போது போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் இந்த பயிற்சிக்கு விஜிலண்ட் ஸ்டார்ம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முடிவடைய வேண்டிய இந்த பயிற்சி மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் கூட்டு போர்ப்பயிற்சியே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
போர் விமானங்களைப் பார்த்து அஞ்சுகிறதா வட கொரியா?
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் போர் பயிற்சியில் F-35As and F-35Bs என்ற அதிநவீன போர் விமானங்கள் இந்த போர் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கின்றன. தென் கொரியா மற்றும் அமெரிக்கா என இரண்டு தரப்பிலிருந்தும் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்களும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டு பயிற்சி செய்து வருகின்றன.
ரேடாரில் சிக்கிக் கொள்ளாமல் பறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்களுக்குப் பதிலடி கொடுக்க வட கொரியாவிடம் போதுமான தொழில்நுட்பங்கள் கிடையாது. மேலும், இப்போது வடகொரியாவிடம் இருக்கும் போர் விமானங்கள் பழைமையானவை. பிற்காலத்தில் போர் ஏற்படும் சூழலில் இந்த அதிநவீன விமானங்கள் மூலமாக வட கொரியா எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கிம் ஜாங் உன் பரிசோதனையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.