உலகத்தமிழர்கள் அனைவரும் உற்று நோக்கிய இலங்கைக்கு எதிரான ஐ.நா சபையின் மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது, இத்தீர்மானத்தின் தாக்கம் என்ன? இதனால் என்ன நடக்கும் என்பது பற்றிய விரிவான அலசல்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் கொண்டுவந்தன. உலகமே உற்று நோக்கிய இந்த தீர்மானம் 21 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. இத்தீர்மானத்தை சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தன. இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நிறைவேறியுள்ள இந்த தீர்மானத்தின் தாக்கங்கள் என்ன என்று பேசுகிறார் சென்னை பல்கலைக்கழக, அரசியல்துறை பேராசிரியர் ராமு.மணிவண்ணன் “ இந்த ஐ.நா மனித உரிமைகள் தீர்மானம் மூலமாக, ஈழத்தமிழர்களுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லிவிட இயலாது. ஆனால் இலங்கை அரசு மீது உள்ள இனப்படுகொலை, போர்க்குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி, அந்த நாடு இப்போதும் கண்காணிக்கப்படும் சூழலில் உள்ளது என்பதை இத்தீர்மானம் தெரிவிக்கிறது. தற்போது இலங்கை அரசின் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோர்தான் இந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளாக இருப்பதால் அவர்களுக்கான அழுத்தமும், கவனமும் அதிகரிப்பதாகவே உள்ளது.
இந்த தீர்மானத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு என்பது மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது. இந்தியா இப்போதும்கூட 13 வது சட்டதிருத்தத்தை பற்றிதான் பேசுகிறார்களே தவிர, போர்க்குற்றங்களைப்பற்றி பேசவே இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்களின் முக்கிய பிரச்னை என்ன, அவர்களுக்கான தேவை என்ன என்பதை இந்தியா இன்னும் உணரவில்லை. இந்தியா இப்போதும் ஒருங்கிணைந்த இலங்கை என்பதைப்பற்றிதான் பேசுகிறார்கள், அது அந்நாட்டு மக்கள் தீர்மானிக்கவேண்டியது. காங்கிரஸ் அரசு இருந்தபோதும், இப்போது பாஜக அரசு இருக்கும்போதும் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே உள்ளனர். ஆனாலும் எப்போதும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் மீது அன்புடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர்.
புவிசார் அரசியலுக்காக இந்த தீர்மானத்தை மேற்குலக நாடுகள் கொண்டுவந்தாலும் கூட, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஒரு கண்காணிப்பு வட்டத்திற்குள் இலங்கையை வைத்திருக்க இந்த தீர்மானம் உதவியாக இருக்கும். ஏற்கனவே மூன்று தீர்மானங்கள் ஐநா மனித உரிமை மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, ஆனால் அதன் அடிப்படையில் இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இனப்படுகொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்தும் உலக நாடுகள் மற்றும் ஐநாவின் விசாரணை வளையத்தில் இலங்கையை வைத்திருக்கும் வேலையை இத்தீர்மானம் செய்கிறது” என்கிறார் உணர்வுப்பூர்மாக.
இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்கள், தமிழக தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது அவர்களின் ஏமாற்றமாக உள்ளது. இத்தீர்மானம் பற்றி பேசுகிறார் கனடாவை சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி “இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்பது ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமான தீர்மானமே. இனப்படுகொலை உள்ளிட்ட கொடிய அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு நொந்துபோயுள்ள ஈழத்தமிழர் சமூகம், ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் மூலமாக இம்முறையாவது உரிய நீதி கிடைக்கும் என்றுதான் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இந்த தீர்மானம் என்பது 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விடவும் மிகவும் பலவீனமான தீர்மானம். 2015 ஆண்டு நிறைவேறிய ஐ.நா தீர்மானத்தில் கலப்பு பொறிமுறைகளுடன் கூடிய பல நாடுகள் இணைந்த நீதி விசாரணையை கோரியிருந்தது. ஆனால் இப்போதைய தீர்மானம் என்பது முழுக்கவும் இலங்கையே இந்த போர்க்குற்றத்தை விசாரிக்கலாம் என சொல்கிறது. இது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான தீர்மானம் என்பதை விடவும், மேற்குலக நாடுகள் புவிசார் அரசியலில் தங்களின் இருப்பை நிலைநிறுத்த எங்களை பயன்படுத்துவதாகவே இத்தீர்மானத்தை கொண்டுவந்ததாக பார்க்கிறேன்.
இந்த தீர்மானத்தில் ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது எங்களுக்கு பெரிய ஏமாற்றம். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவிடும் என்பதால், இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் தொன்று தொட்டு இந்தியாவுடன் ஒட்டி உறவாடக்கூடிய சமூகம் ஈழத்தமிழர் சமூகமே. எனவே இந்திரா காந்தி காலத்தில் எப்படி எங்களை இந்தியா அணுகியதோ, அதேபோல இப்போதைய அரசும் எங்களை அணுக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
ஈழத்தமிழர்கள் முழுக்க முழுக்க ஐ.நாவையே நம்புவது சரிதானா என தெரியவில்லை. இனிவரும் காலங்களில் உலக அளவில் ஈழத்தமிழர்கள் அறிவுசார் தளங்களில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என நினைக்கிறேன். இப்போதைய தீர்மானத்தால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை, இந்தியா எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே, எங்களுக்கான நிரந்தரமான அரசியல் பாதுகாப்பு பொறிமுறை உருவாகும் என நினைக்கிறேன். சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள தற்போதைய இலங்கையில், ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்குவதே இந்தியாவுக்கும் சாதகமான விஷயமாகும். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் போது, இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களின்படியும், அதனை காலம் கடத்தும் வாய்ப்பாகவே இலங்கை அரசு பயன்படுத்தியதே தவிர, எந்த காத்திரமான நடவடிக்கையும் இல்லை, உலக நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முன்பை விடவும் இலங்கை அரசு இப்போது வலுவாக உள்ளது அதனால்; இப்போதைய தீர்மானத்தை அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள், இந்த தீர்மானம் எங்களின் வெற்றிதான் என்று இலங்கை அரசே சொல்கிறது. ஈழத்தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமாக இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்வாக விவகாரங்களில் கூட ஐ.நா எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது பெரும் வருத்தமாக உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் தனித்தனியாக போராடுகிறார்கள், ஆனால் இது அறிவுசார்ந்த தளங்களின் ஒற்றுமையுடன் வடிவமைக்கப்படவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மேற்குலக நாடுகளை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தால் எங்கள் போராட்டம் பின்னடைவை சந்திக்கும் என்றே நினைக்கிறேன். தமிழகமும், ஈழத்தமிழர் விவகாரத்தில் எத்தகைய அழுத்தம் கொடுக்க முடியுமோ, உதவ முடியுமோ அதை செய்கிறார்கள். இந்தியா இனியேனும் எங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, அதன் மூலமே எங்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்” என்கிறார் அழுத்தமாக
-வீரமணி சுந்தரசோழன்