அமெரிக்கா, தாலிபன், பாக்.பிரதமர் ட்விட்டர்
உலகம்

அன்று அமெரிக்கா செய்த தவறுதான்.. இன்று பாகிஸ்தானில் குண்டு வெடிக்கிறது - பிரதமரின் பேச்சும் வரலாறும்

”ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” என அந்நாட்டின் தற்காலிக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Prakash J

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமர்!

அண்டை நாடான பாகிஸ்தானில், 2024 பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக 2018இல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கூட்டணி ஆட்சி அமைத்தார். கடந்த ஆண்டு (2022) அவர்மீது கூட்டணிக் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

இம்ரான் கான்

பின்னர், கடந்த ஆகஸ்ட் (2023), நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர், ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி மற்றும் குண்டுவெடிப்புகள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நாடு பொருளாதாரரீதியாகவும் கடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் ஒரு லிட்டர் வரலாறு காணாத வகையில் ரூ.300க்கு விற்கப்படுகிறது. மின் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தப் பாதிப்புகள் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தாலும், சமீபகாலமாக ஆங்காங்கே குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த நவம்பர் 3ஆம் தேதிகூட வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரத்தில் காவல் துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர்; 21 பேர் படுகாயமுற்றனர். இதற்கு முன்பு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மசூதி ஒன்றின் அருகே மத வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan Bomb Blast

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தானில் 51 சதவீதம் அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை நடத்தப்பட்ட 165 தாக்குதல்களில் 294 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 598 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் 15, 2021 மற்றும் ஆகஸ்ட் 14, 2022க்கு இடையில் நடந்த 250 தாக்குதல்களில் 433 பேர் கொல்லப்பட்டனர். 719 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

தற்காலிக பிரதமர் அன்வர் அளித்த பேட்டி!

இப்படி தொடர்ந்து நடைபெறும் குண்டுவெடிப்பு பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வர், “எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021இல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பைவிட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாகிஸ்தானில் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளிலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது குறித்த தனது நிலைப்பாட்டில் இஸ்லாமாபாத் உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 23 வயதில் குவியும் சாதனைகள்! ஒரே போட்டியில் 2 World Record! சச்சின் சாதனையை மீண்டும் உடைத்த ரச்சின்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள்

இதே கருத்தை அவர் கடந்த செப்டம்பர் மாதமும் தெரிவித்திருந்தார். அப்போது அவர், “ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறும்போது விட்டுச் சென்ற அந்நாட்டின் ராணுவத் தளவாடங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, இறுதியில் பாகிஸ்தான் தலிபான்களிடம் சென்றுள்ளன.

இந்த உபகரணங்கள், இஸ்லாமாபாத்திற்கு புதிய சவாலாக உருவாகி வருகிறது. அமெரிக்கா எத்தனை உபகரணங்களை விட்டுச் சென்றது என்பது பற்றிய திட்டவட்டமான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் தலிபான்கள் அமெரிக்கா வழங்கிய துப்பாக்கிச் சக்தியைக் கைப்பற்றியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பீகார்: 65% இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

அமெரிக்கா: இரட்டைக் கோபுரம் தாக்குதல்

2001 செப்டம்பர் 11ஆம் நாள் உலகமே மறக்க முடியாத நாளாக அமைந்தது. அமெரிக்காவில் ஓங்கி இரட்டைக்கோபுரம் தலிபான்களால் தகர்க்கப்பட்டது. அதுமுதல் அமெரிக்கா - தலிபான்களுக்கு இடையே மோதல் தொடங்கியது. அத்தாக்குதலை நடத்திய அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தலிபான்கள் பாதுகாப்பு கொடுத்ததே அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை ஆப்கன் காதில் வாங்கவில்லை.

இதையடுத்து, ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. 2001 நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்கப் படைகள் ஆட்சியைக் கைப்பற்றின. இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது. அதேநேரத்தில், அமெரிக்க ஆதரவு அரசின் பதவிக்காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை. ஆனால், தலிபான்களின் பிற்போக்குத்தன்மையான சட்டங்களிலிருந்து மீண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர்.

இதையும் படிக்க: 48 ஆண்டுக்கால உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக.. நடப்பு சீசனில் 500 சிக்சர்கள் அடித்து சாதனை!

ஆப்கனிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள்!

பின்னர் ஒப்பந்தம் ஒன்றுக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் அவசரமாக வெளியேறின. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தலிபான்கள் அனைத்துப் பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். அதன் பலனாக, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என உறுதியளித்தனர். ஆனால், நாட்கள் கொஞ்சம் கடந்த நிலையில், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அம்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

அதன் முதல் அறிவிப்பாக பெண் கல்விக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. அதுபோல் பெண்களின் விளையாட்டுக்கும் தடை உருவாக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் கல்விக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனால், பெண் விளையாட்டு வீராங்கனைகளும் மாணவிகளும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். தவிர, அரசியல் அளவிலும் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று 2 ஆண்டுக்கு மேலாகிறது. அந்தச் சமயத்தில் அமெரிக்கப் படைகள் ஆயுதங்களை அங்கு விட்டுச் சென்றதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், இதை அமெரிக்கா முற்றிலும் மறுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில்தான் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடம்.. ஆனாலும் தோனியின் வேகத்தை யாரும் முறியடிக்கவில்லை!