லீ ஷங்ஃபூ, கியூன் காங் ட்விட்டர்
உலகம்

சீனாவில் தொடர்ந்து காணாமல் போகும் அமைச்சர்கள், தலைமை அதிகாரிகள்.. பின்னணி இதுதான்!

சீனாவில் அமைச்சர்களும் தலைமை அதிகாரிகளும் அண்மைக்காலமாக காணாமல் போவதும் பதவி நீக்கப்படுவதும் தொடர்கதையாகி இருக்கிறது.

Prakash J

அண்டை நாடான சீனாவில் முக்கிய அமைச்சர்களும், தலைமை அதிகாரிகளும் காணாமல் போகும் விஷயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சீன வெளியுறவு அமைச்சர் கியூன் காங், ராக்கெட் படைப்பிரிவு கமாண்டர் ஜெனரல் லீ யாசோ ஆகியோர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

அவர்களைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ராணுவ அமைச்சர் லீ ஷங்ஃபூ காணாமல் போனார். ஷி ஜின்பிங்கிற்கு நெருக்கமான இந்த மூவரும் அடுத்தடுத்து காணாமல் போக, கட்சி தரப்பிலோ அரசு தரப்பிலோ எந்த ரியாக்‌ஷனும் வெளியாகவில்லை.

திடீரென அக்டோபர் ஆரம்பத்தில் சீன அரசு இணையதளத்தில் வெளியுறவு அமைச்சர் மீண்டும் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல், நீண்டநாள் நீடிக்கவில்லை. அக்டோபர் 24ஆம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் மூவரும் பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சீன வெளியுறவு அமைச்சராக இருந்த 57 வயதான கியூன், கட்சியில் தாத்தா, தந்தைக்குப் பிறகு நுழைந்து வளர்ச்சி கண்டவர். 2021இல் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட அவரது, வெளிப்படையான பேச்சால் செல்வாக்கு உயர்ந்தது, ஷியின் கண்ணை உறுத்தியதாக தெரிகிறது. எனினும், அவரது நீக்கத்திற்கு திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

அடுத்து 65 வயதான லீ, விண்வெளி பொறியாளர். செயற்கைக்கோள் திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய இவர், தந்தையின் புரட்சிகர பின்னணியில் முன்னேறினார். ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கியதற்காக அமெரிக்க பொருளாதாரத் தடையை 2018இல் எதிர்கொண்டவர். ராணுவ அமைச்சரான இவர், திடீரென ஷி ஜின்பிங்கின் கடைக்கண் பார்வையில் இருந்து விலகி, காணாமல் போய் தற்போது பதவி நீக்கப்பட்டுள்ளார்.

லீ ஷங்ஃபூ

ராணுவ கமாண்டரின் பதவிநீக்க பின்னணியும் ஏறக்குறைய இதேபோன்ற செல்வாக்கு உயர்வுடன் தொடர்புடையதே. ஜூனில் காணாமல் போன PLAவின் ராக்கெட் படைப்பிரிவு கமாண்டர், ஜெனரல் லீ யாசோவின் செல்வாக்கு ராணுவத்தில் அதிகரித்து வந்தது. இந்த விஷயம் அதிபரின் பார்வைக்கும் காதுகளுக்கும் போனது. விளைவு, ஆயுதக் கொள்முதலில் ராணுவ அமைச்சர் லீ ஷாங்கு மற்றும் ராக்கெட் பிரிவு கமாண்டர் லீ யாசோ இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு சீன அரசியலில் இருந்து காணாமல் போகச் செய்யப்பட்டு கடைசியில் பதவி நீக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!